இதெல்லாம்தான் டாஸ்க்கா… முடியல பிக் பாஸ்… முடிச்சுக்குவோம்! 94-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

dance

கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் வரும் பொண்ணுங்களே இப்படித்தான் பாடலுடன் ஆரம்பமானது, 94-வது நாள். பாடல் புரியாத கணேஷ், ஏதோ கிளாசிக்கல் பாடலுக்கு ஆடுவதுபோல ஆடிக்கொண்டிருந்தார். ஆரவ்வும் ஹரீஷும், பிரஷ் செய்துகொண்டே ஆடிக்கொண்டிருந்தனர். சிநேகன், தன் அக்மார்க் ராமராஜன் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் கலக்கலாக ஆடும் பிந்துமாதவி, இந்தப் பாடலுக்கு ஏனோ அமைதியாக இருந்தார். தான் நடித்த படத்தில் வரும் பாடல் என பிந்து மாதவி கண்டுபிடித்துவிட்டாரோ என்னவோ!

பிந்து மாதவி

டாஸ்க் எதுவும் சொல்லப்படாததால், ஜாலியாக அமர்ந்து ஐவரும் காபி குடித்துக்கொண்டே கதை பேசிக்கொண்டிருந்தனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் பறவை ஒன்று, பிந்துவின் தலையில் சில்மிஷம் செய்துவிட்டதாய் ஹரீஷ் கிளப்ப, பிந்து Bullshit (எருமை சானம்) என புலம்பினார். இல்லைங்க, இது birdshit தான், Bullshit பெருசா இருக்கும் என்றார்.

பிக் பாஸ் தமிழ்

அதைச் செய்தது காக்காதான் என உறுதியாகச் சொன்னார் ஆரவ். கக்கா எந்தப் பறவையோடதுனு கண்டுபிடிக்கிற நேரமா இது ஆரவ். இவ்வளவு களேபரங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க ஒண்ணும் தெரியாத கரகாட்டக்காரன் பட செந்தில் போல, அமைதியாய் அமர்ந்திருந்த பறவையை ஒன்றை காட்டிக்கொடுத்தது, பிக் பாஸ் கேமரா. ஆமா, பறவைகூட ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது. ஆனா, அந்தப் பறவை தான் தப்பே பண்ணலியே.(என்னமோ போங்க பிக் பாஸ்)

***
12 மணிக்கு, நாளுக்குரிய முதல் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். வழக்கம்போல தெலுங்குப் பட டைட்டில்தான்’ நிக்குறோம் தூக்குறோம்’. நீச்சல் குளத்தில் இரண்டு இரும்புக்கம்பிகள் இருக்கும். அதில் ஏறி நிற்க வேண்டும். எந்த அணி கடைசி வரை ஏறி நிற்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர். சிநேகன், ஆரவ் ஒரு அணியாகவும் ஹரீஷ், பிந்து ஒரு அணியாகவும் பிரித்துக்கொண்டனர். கணேஷ், இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்தார்.

முதலில் பிந்து மாதவியும் ஆரவ்வும், கம்பி மேல் நிற்க ஆரம்பித்தனர். இந்த வாரம் முழுக்கவே எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் தான் செல்கிறது. இந்தப் போட்டியைக்கூட மிகவும் ஜாலியாக விளையாட ஆரம்பித்தனர். ஆரவ்வும் பிந்து மாதவியும், கைகளைக் கோத்தபடி, ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ எனப் பாடிக்கொண்டே கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தனர். சுவாரஸ்யமே இல்லாமல், டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்க, சிநேகன் மட்டும், “இந்த மாதிரி விளையாட்டா ஆரம்பிக்கிற டாஸ்க்தான் சீரியஸா முடியும் “நீங்க வேணும்னா பாருங்களேன் எனப் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி ஏதோ சொல்லிக்கொண்டி ருந்தார்.

பிந்து மாதவி

ஹரீஷ் ஒரு பக்கம், இந்த மாதிரி டாஸ்க்குக்கெல்லாம் கவிஞர்தான் லாயக்கு. அவர் பாட்டுக்கு நிப்பார் என்றார். ‘பாட்டுக்கு’ நிற்பவர்தானே கவிஞர். ஆனால், அந்த கார் டாஸ்க்கில் சுஜாவும் சிநேகனும் அப்படித்தான் நடந்துகொண்டனர். சந்தானம், ‘வாலு’ பட காமெடி ஒன்றில் இரவு முழுக்க நின்று ஒரு நாளை கடப்பார். அதை மீறி கார் டாஸ்க் செய்தனர் சுஜாவும் சிநேகனும்.

டாஸ்க் ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகியும் ஒன்றுமே நடக்காமல் இருக்க, ‘இது ஆவறதில்ல’ என கடுப்பான பிக் பாஸ், இருவரையும் ஒரு கால், ஒரு கை கம்பியில் படக்கூடாது என கட்டளையிட்டார். அதற்குரிய பலன் சீக்கிரமே கிடைத்தது. ஆரவ் முதலில் அவுட்டாக, பிறகு பிந்துவும் அவுட்டானார். பின்பு ஹரீஷும், சிநேகனும் போட்டியில் பங்குபெற்றனர். வழக்கம்போல, ஹரீஷ் சொதப்ப, போட்டியில் சிநேகன் வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்ற அணிக்கு பாயின்ட்டுக்கு பதிலாக 30,000 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர் gift voucher வழங்கினார் பிக் பாஸ். ஆரவ்வும் சிநேகனும், 100 நாள் உழைச்சிருக்கோம், இந்த விவோ மொபைலையாவது ஒண்ணு கொடுக்கலாம்ல, என கேமராவில் புலம்பியதற்கு, வவுச்சர் கிடைத்திருக்கிறது போல. அட, இது நம்ம எல்லோருக்குமான வெற்றி என துணிக்கடை வவுச்சருடன் போஸ் கொடுக்க அனைவரையும் அழைத்தார். போற போக்கைப் பார்த்தா, பிக்பாஸ் செட்டைப் பிரித்தால்கூட, சிநேகன் வெளியே வரமாட்டார் போல.

பிந்து மாதவி

****
மாலை 5 மணிக்கு அடுத்த டாஸ்க் ஆரம்பமானது. டாஸ்க்கின் பெயர் டிக் டேக் டோ. பள்ளிக்கூடங்களில், போர் அடிக்கும் வகுப்பில் பேப்பரில் கட்டம் போட்டு விளையாடுவோமே , அதே விளையாட்டுதான். 9 கட்டங்கள் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் யார் முதலில் கோணலாகவோ, நேராகவோ ஒரு வரிசையை கம்ப்ளீட் செய்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். இதே போட்டி, தரையில் நடந்தது. இரு அணிகளுக்கும் மூன்று துண்டுகள் கொடுக்கப்பட்டன. எந்த அணி முதலில் ஒரு வரிசையை முடிக்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். சிநேகன், கணேஷ் ஒரு அணியாகவும், பிந்து, ஹரீஷ் ஒரு அணியாகவும் பிரிந்தனர். இந்த முறை ஆரவ் நடுவராக செயல்பட்டார்.

முதல்முறை பிந்து மாதவி வென்றுவிட, அடுத்த மூன்று முறையும் சிநேகன், கணேஷ் அணி வென்றுவிட்டது. “எனக்கு இந்த கேமோட, டெக்னிக் கொஞ்ச நேரம் கழிச்சுதான் தெரிஞ்சது நண்பா” என்றார் கணேஷ். இவர் மட்டும் தனியாகச் சென்று ‘விவேகம்’ படம் பார்த்துவிட்டு வந்திருப்பாரோ என்னவோ, விவேக் ஓபராயைவிட அதிகமாக ‘நண்பா’ போட்டுக்கொண்டிருந்தார். போதும் நண்பா முடியல. மறுபக்கம், ஆரவ் விளையாட்டை விளக்கிக்கொண்டிருந்தார். டீ முடிஞ்சு போச்சு ஆரவ்..

சிநேகன்

***
மாலை 6 மணிக்கு பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்குள் பிந்து மாதவியை அழைத்து, ‘இந்த சூட்கேஸில் 10 லட்ச ரூபாய் இருக்கு என்றார். இப்போதே விலகிக்கொள்பவர்கள் , இந்த 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்’ என அறிவித்தார் பிக் பாஸ்.அதேபோல, இந்த 10 லட்ச ரூபாய் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையிலிருந்து கழிக்கப்படும் என்றார்.

(இதென்ன நியாயம் பிக் பாஸ்). பழைய படங்களில் காதலைப் பிரிக்கும் பணக்கார அப்பா, ஒரு சூட்கேஸில் பணம் தருவாரே, அதே டெம்ப்ளேட். ஒட்டுமொத்த அணியும் எங்கள் காதல் உண்மைக் காதல் என 10 லட்சத்தை வாங்க மறுத்தது. நாங்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு வரவில்லை என்றும், மக்கள் விருப்பப்பட்டால் செல்கிறேன் என்றும் அறிவித்தார்கள். “இப்போதானே டிரெஸ் எல்லாம் … ” என ஹரீஷ் எதையோ சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் பிக் பாஸ் பேசத்தொடங்கி, ஹரீஷை வாயடைத்தார். (நல்லா எடிட் பண்ணுங்கப்பா ).

யோசிச்சு முடிவு பண்ணுங்க, ‘போனா வராது, பொழுது போனா கிடைக்காது’ என பிக் பாஸ் எவ்வளவோ வார்த்தை ஜாலங்கள் காட்டியும் யாரும் அதை எடுக்கவில்லை. இனி பாருங்க, விலை ஏறும் என கணித்தார் ஆரவ். 30 லட்ச ரூபாய் வரை இந்த டீலிங் போகும் பாருங்களேன் என்றார் ஆரவ். அப்படியே, 50 லட்சம் வரை போனா, எடுத்துட்டுப் போயிடலாம்னு ஆரவ் பிளான் பண்ணினார் போல.

இதற்கு நடுவே கணேஷை கலாய்க்க, சிநேகனும் ஹரிஷும் திட்டம் போட்டனர். தங்களுக்குள் சண்டை போட்டால், ‘ என்ன ஆச்சு நண்பா’ என கணேஷ் வருவார் என்பது சிநேகனின் எண்ணம். என்னடா இது ஜென்டில்மேன் கணேஷுக்கு வந்த சோதனை. சரி, ஜென்டில்மேன் என்றாலே ஏமாளிகள்தானே! இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, கணேஷ் எதிர்பார்த்தபடி “என்ன ஆச்சு நண்பா” என்றார். ஆனால், ஹரக்‌ஷின் திருட்டு விழியில், நடிப்பதைக் கண்டுபிடித்துவிட்டார் கணேஷ். அப்போதும் அதே சிரிப்புதான். எப்பதான் பாஸ் உங்களுக்கு கோபம் வரும்.

பிந்து மாதவி

மீண்டும் 7.30 மணிக்கு பெட்டி வந்தது. 15, 20 லட்சம்னு கூட்டுவார்னு பார்த்தா, பிக்பாஸ் ஒன்றாம் வாய்ப்பாடு போல ஒரு எண்ணைக் கூட்டி, ”11 லட்சம் இருக்கு, யாரு போறீங்க” என்றார். இப்போதும் முடியாது, முடியாது என கூலாக அறிவித்தது ஐவர் கூட்டணி. எப்படி ஒற்றுமையா இருக்கணும்னு, தமிழக அரசியலின் மூவர் கூட்டணிக்கு (இப்போ ரெண்டு) கிளாஸ் எடுக்கலாம் இந்த ஐவர் கூட்டணி.

இரவு எட்டு மணிக்கு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து, வந்த டாஸ்க்குகளில் எவையெல்லாம் சிறப்பாக இருந்ததோ, அந்த டாஸ்க்குகள் இந்த வாரம் முழுக்க வருமாம். அப்ப, புதுசா எதுவும் யோசிக்கல. அப்படித்தான…

பிக் பாஸில் ஹிட் அடித்த ‘திருடா.. திருடா’ டாஸ்க்கை மீண்டும் விளையாட பணித்தார் பிக் பாஸ். ஐவர் மட்டுமே இருப்பதால், உறுப்பினர்களுக்கு பெயர் என எதுவும் வழங்காமல், வைரப்பெட்டி மட்டும் எடுத்துவந்து வைக்கப்பட்டது. ஹரீஷை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, ”இந்தமுறை நீங்கள்தான் திருடனாக இருக்க வேண்டும்” என்றார் பிக் பாஸ். நம்ம பிஞ்சு மூஞ்சிக்கு அதெல்லாம் செட் ஆகாது என்பது போல பார்த்தார் ஹரீஷ். அறையைவிட்டு வெளியே செல்லும்போது, ”இந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு போங்க ஹரீஷ்” என்றார் பிக் பாஸ். கேஷுவலா இருக்காங்களாம். கணேஷை அழைத்து, “திருடனைப் பிடிக்க என்ன திட்டம் வச்சி ருக்கீங்க” என்றார் பிக் பாஸ். “நாங்க அலெர்ட்டா இருப்போம் பிக் பாஸ்” என்றார் கணேஷ். உங்க அலெர்ட் லட்சணங்களைத்தான் நாங்க போன தடவை பார்த்தோமேடா.

ஆரவ்

சிநேகன்

” நான் வேணும்னா, போன தடவை மாதிரி தூங்கிட்டா வைரத்தை ஈசியா எடுத்துடலாம்ல” என நக்கலடித்தார் ஆரவ். ஆம், சென்ற முறை இந்த விளையாட்டு வந்தபோது அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மிகப்பெரிய பாரம்பர்ய கூட்டுக் குடும்பம். காயத்ரி , நமீதா என இரு மருமகள்கள். கண்டிப்பான மாமனார். கடைக்குட்டி ஜூலி. வேலையாள் சிநேகன். விருந்தாளி ஓவியா என அதுவொரு கலக்கல் டீம். ” இதான் உங்க அண்ணியா, பன்னி மாதிரி இருக்கு” என ஓவியா கேட்டதெல்லாம் ஓவியா ஆர்மியினருக்குக் கண் முன்னால் வந்து போயிருக்கும் (எனக்கும் வந்து போச்சு பாஸ்).

இரவு, ஓவியா வைரத்தை ஜாலியாக எடுக்க முயற்சித்தது. சக்தி, ஆரவ் தூங்கியதும், அதை மாற்றிவிட்டு கமுக்கமாகத் தூங்கியது. இரண்டு நாட்கள் கழித்து, ” இதுக்கு மேல முடியாது குருநாதா” என சக்தி அப்ரூவராக மாறியது என கிரைம் த்ரில்லர் ரேஞ்சில் நிகழ்ந்த நிகழ்வு அது.

ஆனால், இப்போது இருப்பது ஐவர் மட்டும்தான். இதில் எப்படி நடத்த முடியும் என்பது போல ஆரம்பிக்கப்பட்டது ‘திருடா திருடா’ டாஸ்க்.
அங்கு இருக்கும் அணியினரை நக்கல் அடித்தபடியே இருந்தார் ஆரவ். அந்தத் திருடன் ஓவர் கோட் போட்டிருக்கலாம் (பிந்து), குடுமி வச்சு இருக்கலாம் (சிநேகன்), கண்ணாடி போட்டிருக்கலாம் (ஹரீஷ் ),தமிழ் பேசத் தெரியாத மாதிரி நடிக்கலாம் (பிந்து மாதவி) என ,தெறி, பட இன்டர்வெல் விஜய் போல பஞ்ச் பேசிக்கொண்டிருந்தார். கணேஷ் சும்மாவே ஓவர் ஆக்டிங் பண்ணுவார். அவரெல்லாம் இதுக்கு செட்டாக மாட்டார் எனப் போகிறபோக்கில் ஜென்டில்மேன் கணேஷையும் நக்கல் அடித்தார்.

“எனக்கென்னமோ, உன் மேலதான் டவுட்டா இருக்கு” என கோலை ஆரவ் பக்கம் திருப்பினார் பிந்துமாதவி. “உண்மைலயே நான் திருந்திட்டேன், நான் கொலைகாரன் இல்லை” என கொலைகாரன் டாஸ்க்கை நினைவுபடுத்தினார் ஆரவ், இப்போது பிந்துமாதவி, எனக்கென்னமோ சிநேகன் மேலதான் சந்தேகமா இருக்கு” என்றார். ”பெத்த தாயி பிள்ளையைப் பார்த்து சந்தேகப்படலாமா” என்றார் சிநேகன். ஏனோ, இன்று நாள் முழுவதும் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககரா போல, முகத்தில் பவுடர் பூசிய நிலையில் இருந்தார் சிநேகன். (ஃபைனலுக்கு ரெடியாகுறார் போல).

சிநேகன்

“எனக்கு இப்ப ஹரீஷ் மேலதான் சந்தேகம்” என்றார் பிந்துமாதவி. அடப்போம்மா, நீயி பிக் பாஸைத் தவிர எல்லார் மேலயும் சந்தேகப்படுற. ‘ஹரீஷ், நெசமா நான் இல்லைங்க’ என்பது போல பிந்துவைப் பார்த்தார். பிந்து மாதவி , ”சத்தியமா நீ இல்லையா? சத்தியமா” என மீண்டும் மீண்டும் கேட்டார். இம்புட்டு பச்ச மண்ணா இருக்கே, விட்டா ஸ்கூல் பொண்ணு மாதிரி அடுத்து மதர் ப்ராமிஸ், ஸ்டடி ப்ராமிஸ் எல்லாம் கேட்பார் போல. ஆனாலும், பிந்து மாதவி ப்ராமிஸ் கேட்ட விதம், அவ்வளவு அழகு.

போன தடவை கொடுத்தது போல, டூப்ளிகேட் வைரம் எதுவும் கொடுக்காமல் இருக்கலாம் என ஆரவ் தனக்குத்தானே ஏதேதோ சொல்லிக் கொண்டார். ஆரவ் மட்டும் வாஷ் பேசின் மேல் இருக்கும் இடத்தில் எல்லாம் சென்று டூப்ளிகேட் வைரம் இருக்கிறதா எனப் பார்த்தார். பழைய போட்டியாளர்கள், நினைவுகள் என அதிகம் பகிர்வது ஆரவ்தான். சிநேகன், கணேஷ் எல்லாம் அடுத்த கட்டத்துக்கு விரைவில் வந்துவிடுகிறார்கள். சிநேகன் கூர்கா போல, குச்சி, விசிலுடன் களம் இறங்கினார். ரோந்துப் பணியில் ஈடுபடுவார் போல.

கதாநாயகன், ‘பலூன்’ பட ப்ரொமோஷன்களுக்குப் பிறகு, தன்னை அறியாமல் இந்த வாரம் வெளியாக இருக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’ திரைப்படத்துக்கு விளம்பரம் வைத்துக்கொண்டிருந்தார் ஆரவ். வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் வைரலாகி, திரைப்படங்கள் வரை ஹிட் அடித்த வரலாறு, ‘ஹர ஹர மகாதேவகி’க்கு உண்டு. அதில் வரும் ராஜா கரடி கதையை பிக் பாஸுக்கு ஏற்றவாறு சொன்னார் ஆரவ். அந்த ராஜா பேரு பிக் பாஸாம் எனப் போகிற போக்கில் பிக் பாஸைக் கொட்டினார் ஹரீஷ். எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் சென்ற நாளை, சுவாரஸ்யமாக்க, தன்னால் இயன்றவரை பாடுபட்டார் ஆரவ். பிக் பாஸ், அவருக்குக் கொஞ்சம் பேட்டாவுல பார்த்து போட்டுக்கொடுங்க பிக் பாஸ்.

ஹரிஷ்

“ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா பாக்குறவங்கள எல்லாம் அடிக்கச் சொன்னாராம். அந்த ராஜா, ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போனாராம். ஒரு கரடியைப் பார்த்தாராம். அம்பு எடுத்து விட்டாராம். ஜஸ்ட்டு மிஸ்ஸு. கரடி மேல படல. அடுத்து, ஒரு கம்ப எடுத்து விட்டாராம் அவரு மேல, அதுவும் ஜஸ்ட்டு மிஸ்ஸு. அந்தக் கரடி எஸ்கேப் ஆயிடுச்சு. பதிலுக்கு அந்தக் கரடி, இந்த ராஜாவைப் பார்த்து சொல்லுச்சாம். இந்த வில்லையே உனக்கு விடத்தெரியலயே, நீ எப்படி இந்த வைரத்த திருடப்போற? அதுக்கு அந்த ராஜா, “பாருடா, இந்தவாட்டி நன்னா திருடுவேன்னு சொன்னாராம். “முதல்முறையாக ஹர ஹர மாகதேவகி ஜோக் கேட்கிறார் போல பிந்து மாதவி விழுந்து விழுந்து சிரித்தார்.

வெளியே சென்றதும் கண்டிப்பா அசிஸ்டென்டிடம் சொல்லி, மற்ற ஜோக்குகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வார் என நம்பலாம். பிந்துவுக்கு உண்மையிலேயே தமிழ் தெரியாதுதான் போல. அம்புல இருந்து எடுத்து எப்படி வில்ல விட முடியும் என கடைசி வரை அவர் கேட்கவில்லை. சரி, எல்லாம் தெரிஞ்ச கவிஞர் சிநேகனே, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது தாயுமானவர்னு நம்பும்போது, சுந்தரத் தெலுகு பிந்து மாதவியை எல்லாம் குற்றம் சொல்வது தவறு. நீ சிரி தாயி.

‘தேவதைகளும் பிசாசுகளும்’ டாஸ்க்கிற்குப் பிறகு, ஒட்டுமொத்த அணியும் உஷாராகிவிட்டது. மெனக்கெட்டு விழித்திருந்து டாஸ்க் செய்கிறார்களோ இல்லையோ. அங்கேயே பாயப் போட்டு படுத்துவிட்டார்கள். தேவதைகள் டாஸ்க்கின்போது, இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார் ஆரவ். ஆனால், இந்த முறை அணி மாறிவிட்டதால், யாரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என கவுண்டமணி சொன்னதுதான் எவ்வளவு தீர்க்கதரிசனம். ஐவரும், தங்கள் பெட்டை எடுத்துவந்து வைரப்பெட்டிக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டனர்.

Source: Vikatan

முந்திக் கொண்டார் சினேகன்… விரட்டிப் பிடிப்பது கணேஷா…சுஜாவா?! 84-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

kamal

தமிழக அரசியல்குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. ‘கேரள முதல்வருடனான சந்திப்பு, விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திப்பது என முழு நேர அரசியல்வாதியாக மாறிக்கொண்டிருக்கிறார் கமல்’ என்ற தகவல்களும் வலம் வருகின்றன. ‘தனிக்கட்சி தொடங்குவேன்’ எனவும் அவர் பேசியிருக்கிறார். கமல்ஹாசனின் அரசியல் வருகைகுறித்து மக்கள் மத்தியில் உலவும் சில கேள்விகளைத் தொகுத்திருக்கிறோம். உங்கள் எண்ண ஓட்டத்தைப் பதிவிடுங்கள்..!

Bigg Boss

“நாமினேஷன் வரிசையில் உள்ளவர்களில் எவர் வெளியேறப் போகிறார் என்கிற அறிவிப்பிற்கு முன்னால் ‘கோல்டன் டிக்கெட்’ வெற்றியாளரை தெரிந்து கொள்ளலாம். ‘இதை நானே கொண்டு வந்து தருவேன்’ என்று போட்டியாளர்களிடம் முன்பு வாக்குத் தந்திருக்கிறேன். இதுவரைக்கும் யார் வெற்றியாளர் என்று எனக்கும் தெரியாது. ஆனால் இப்ப தெரியும். வீட்டுக்குள் செல்கிறேன். அப்போது உங்களுக்குத் தெரியும்” என்று சஸ்பெனஸ் வைத்து விட்டு சென்றார் கமல்.

“யாரென்று தெரிகிறதா.. இவன் தீயென்று புரிகிறதா?” என்கிற ‘விஸ்வரூப’ பாடல் பின்னணியில் ஒலிக்க, வெடிச்சத்தத்துடன் தீப்பொறிகள் பறக்க, கமலின் வருகை நிகழ்ந்தது. போட்டியாளர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றார்கள். வீட்டின் வாசலில் போட்டிருந்த வரவேற்பு கோலத்தைப் பாராட்டினார் கமல். அவரின் காலில் விழ சிலர் முயன்ற போது ‘விழாதீங்க.. ப்ளீஸ்’ என்று வேண்டிக் கொண்டார் ‘சுயமரியாதை’யில் நம்பிக்கையுள்ள கமல்.

“ஏதாவது சாப்பிடறீங்களா?” வேர்க்கடலை இருக்கு” என்று உபச்சாரம் செய்தார் சிநேகன். “கொடுங்க.. காந்தி சாப்பிட்டது” என்றார் கமல். (கூட எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாம சாதாரணமாக பேசவே மாட்டீங்களா, ஆண்டவரே!) சிநேகன் வரவேற்பு மடல் வாசித்து கமலைப் பாராட்டினார். கமலின் படத்தலைப்புகள் சில இருந்தன. சில விஷயங்களில் தமிழர்களை மாற்றவே முடியாது. “வீடியோல பார்க்கும் போது உள்ள கலாட்டாவா இருக்கும். இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க?” என்றார் கமல். வேர்க்கடலையையும் கொடுத்து விட்டு பேசச் சொன்னது நல்ல ஐடியா இல்லை. மைக்கில் சத்தம் வரும்.

Bigg Boss

“உங்களை பேச வெச்சு பார்க்கணும்னு ஆசைப்படறோம்” என்றார் பிந்து. (அடுத்த படத்தில் நிச்சயம் சான்ஸ் உண்டு). “சாப்பிட்டுக்கிட்டே எப்படி பேசறது? அப்படி செய்யக்கூடாதுன்னு சின்னப்புள்ளல இருந்து வளர்த்துட்டாங்க” என்றார் கமல். வையாபுரியின் மூக்கைப் பற்றி விசாரித்தார். (“நீங்க கிட்ட வாங்க.. மூக்கு இங்க வராது”) “அவருக்கு மூக்குல அடி. இவருக்கு மனசுல அடி” என்றபடி ஹரீஷை குறும்பாக பார்த்தார்.

பிக் பாஸ் வீட்டு அனுபவத்தைப் பற்றி வையாபுரியிடம் விசாரித்தார். “இப்ப தெளிவா இருக்கேன் சார்.. இது வரைக்கும் நெறய தப்பு பண்ணியிருக்கேன். இந்த 84 நாள்லதான் அதெல்லாம் புரியது. அது வரைக்கும் புரியலை” என்றார் வையாபுரி. “எல்லோருக்கும் அவங்க தப்பு பண்றது தெரியும். சிலர் தெரியாம மறந்துடுவாங்க. அவங்க மூக்கு மாதிரி.. அவங்களாலேயே பார்க்க முடியாது” என்றார். அவரவர்கள் பிக் பாஸ் வீடு ஏற்படுத்திய மாற்றத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டனர். “நான் தப்பு செஞ்சா எல்லோர் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு தோணுது” என்றார் சிநேகன்.

Bigg Boss

“இதெல்லாம் scripted –னு சில பேர் சொல்லிட்டு இருக்காங்க.. இந்த மாதிரி காட்சிகள்லாம் எந்த சினிமால பார்த்திருக்கீங்க? நான் கூட இந்த வீட்டிற்கு முதல்ல வந்த போது, ‘இதுவொரு கட்டிடம், 60 காமிராக்கள் இருக்கு’ன்னு சாதாரணமாகத்தான் பார்த்தேன். ஆனால் இப்போது ஒரு குடும்பத்தைப் பார்க்கிற உணர்வு வருகிறது. குடும்பத்துல சச்சரவு வராது –ன்னு சொல்ல முடியாது. கண்டிப்பா வரும். யாருக்காவது ஆபத்து, அடிப்பட்டது –ன்னா ஒண்ணா கூடிடுவாங்க..”

“இது போன்ற விஷயங்களுக்கு குடும்ப வாழ்க்கை அவசியம். அது உதவும். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நாம் இழந்து விட்டோம். உறவுகளை அடையாளம் சொல்லி அழைக்க வெட்கப்படுகிறோம். நீங்க அதை செஞ்சிக் காட்டீடிங்க. எனக்கு கூட சமயங்களில் இதைப் பார்த்து அழுகை வரும். முன்ன கோபம் நிறைய வந்தது. இப்ப குறைச்சிக்கிட்டேன்” என்று வெளிப்படையாக பேசினார் கமல்.

“வெளியே என்ன நடக்குது சார்?” என்று கமலின் வாயைப் பிடுங்க முயன்றார் பிந்து. ‘இன்னமும் இருட்டலை” என்று ஜாலியாக சமாளித்த கமல், ‘ரெண்டு மூணு புதுப்படம் ரிலீஸ் ஆயிருக்கு. அவ்ளதான்’ என்று முடித்தார்.

“இங்க விளையாடின விளையாட்டுக்களில் எது கடினமாக இருந்தது?” என்று கமல் கேட்டதற்கு, கயிற்றில் உள்ள முடிச்சை அவிழ்க்கும் போட்டிதான் சிரமமாக இருந்தது” என்று கூறினர். எவருமே ஜெயிக்காத போட்டி அது. ‘சரி, அதை எடுத்துட்டு வாங்க” என்று தாமே அதை இலகுவாக செய்து காட்டினார். “எந்தவொரு கடினமான விஷயமும் அடிப்படையில் எளிமையாகத்தான் இருக்கும்’ என்றொரு பொன்மொழி உண்டு.

Bigg Boss

இந்தச் சிக்கலும் அப்படியே. (இந்த முடிச்சை எவ்வாறு அவிழ்ப்பது என்பது தொடர்பான வீடியோ இணையத்தில் உள்ளது) ஆரவ்வும் ஹரீஷூம் அதை முயன்று பார்த்து ஆச்சரியப்பட்டனர். இனிமேல் எவரையும் “முடிச்சவிக்கி” என்று சுலபமாக திட்டி விட முடியாது. அந்த விஷயமும் கடினமானதுதான்.

“சரி. முக்கியமான விஷயம். கோல்டன் டிக்கெட். யார் வெல்லப் போறாங்கன்னு உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். இல்லையா?” வாங்க போகலாம்” என்று அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு அழைத்துச் சென்றார். மதிப்பெண்களின் வரிசை மட்டும் இருந்தது. போட்டியாளர்களின் அடையாளங்கள் இல்லை. கமலிடம் அதற்கான புகைப்படங்கள் இருந்தன. தன்னுடைய புகைப்படத்தை எடுக்கும் போதே, வையாபுரிக்கு புரிந்து விட்டது. “நான்தான் சார் கடைசில இருப்பேன்” என்றார். அதன்படியே ஆகிவிட்டது. வையாபுரிக்கு மேல் சுஜாவின் புகைப்படம்.

அடுத்த புகைப்படத்தை ரகசியமாக எடுத்ததாக கமல் நினைத்துக் கொண்டிருக்கும் போது ‘என் ஃபோட்டோ” என்றார் ஹரீஷ். “பார்த்தீங்களா?” என்று கேட்ட கமல், சட்டென்று தொனியை மாற்றி “பார்த்துட்டீங்களா?” என்றது சிறப்பு. (நடிகன்டா!. ) ஹரீஷ் பெற்ற மதிப்பெண்கள் முப்பது. கணேஷ் முப்பத்தொன்று. பிந்து 36.

முதல் இரண்டு இடத்தை எவர் பெறுவார் என்பதில் சஸ்பென்ஸ் வைத்தார் கமல். போட்டியாளர்களுக்கு பதற்றம் கூடியது. ஆரவ்வா, சிநேகனா? இரண்டு பேருக்குமே ஆதரவு இருந்தது. ஆரவ் பெயரை நிறைய பேர் சொன்னார்கள். சஸ்பென்ஸை இழுத்துக் கொண்டே போனார் கமல். “சரி போட்டோவை அப்புறம் வெச்சுக்கலாம்” என்று சொல்லி எல்லோரையும் பக்கத்தில் அழைத்தார்.

Bigg Boss

ஆரவ் மற்றும் சிநேகன் இடம் வலமாக நின்றார்கள். டிக்கெட்டை வாங்க தன் கையை நீட்டி காமெடி செய்தார் வையாபுரி. யோசிப்பது போல் பாவனை செய்த கமல், சட்டென்று சிநேகனின் கையில் கோல்டன் டிக்கெட்டை தந்தார்.

கவிஞரின் முகத்தில் பரவசம். இனிமேல் சிநேகனை எவரும் அவரை நாமினேட் செய்ய முடியாது. எனவே வெளியேற்றத்திற்கு வாய்ப்பில்லை. நூறு நாள்கள் உறுதியாக இருப்பார். நான்கு இறுதிப் போட்டியாளர்கள் ஒருவராக சிநேகன் தகுதி பெற்றிருக்கிறார். ‘நன்றி.. நன்றி’ என்றார் சிநேகன். கார் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இந்த வெற்றி ஒரு பெரிய மருந்தாக அமைந்திருக்கும். ஆனால் இதே போல் கடினமாக உழைத்த, சுஜா கடைசி வரிசைக்கு சென்றது துரதிர்ஷ்டமானது.

“மக்கள் கைவிட மாட்டாங்கன்னு நான் சொல்லிட்டே இருந்தேனா, இல்லையா?” என்றார் வையாபுரி. “நீங்க வெற்றியை நெருங்கியிருக்கிறீர்கள் என்றுதான் இதற்குப் பொருள்” என்று சிநேகனின் மகிழ்ச்சித் தீயில் சிறிது தண்ணீரை ஊற்றினார் கமல். மற்றவர்களுக்கு இதனால் உற்சாகம் குறைந்து விடக்கூடாதே என்று நினைத்தாரோ என்னமோ, “மத்தவங்கள்லாம் இதைப் பத்தி என்ன நெனக்கறீங்க. ஒரு வெற்றிப் பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கும். எதுவும் நிலையில்லை. சரி. எனக்கு சில கடமைகள் இருக்கு. எவிக்ஷன் பிராசஸை போய்ப் பார்க்கணும்.

Bigg Boss

நான் கிளம்புறேன்” என்றார் கமல். “ரொம்ப நாள் ஆசை சார். உங்களுக்கு ஒரு முத்தம் தரணும்” என்று ஆசைப்பட்டார் சிநேகன். கமல் அதற்கு இணங்கினார். (கமலுக்கே முத்தமா?!) ஹரீஷ் குழந்தை போல் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, “உங்க கன்னத்தைக் கிள்ளணுமா?” என்று கிள்ளி விட்டார். ஹரீஷை உற்சாகப்படுத்தி போட்டியில் நீடிக்க வைக்க வேண்டும் என்கிற கமலின் முயற்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

தன் நண்பர் ஒருவருக்கு கமலின் வாயால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று சுஜா விரும்பினார். ஆசிரியரிடம் பாத்ரூம் போக அனுமதி கேட்கும் எல்கேஜி மாணவன் போல் பயந்து பயந்து சுஜா கேட்க, அனுமதியளித்தார் கமல். சிவகுமார் என்கிற சுஜாவின் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லப்பட்டது. “சரி. கிளம்பறேன். எங்காவது வெடி வெடிக்கப் போவுது, பார்த்து… வரும்போதுதான் வெடி மரியாதையெல்லாமா? போகும் போது கிடையாதா?” என்று ஜாலியாக கமெண்ட் செய்து கொண்டே கிளம்பிய கமல், எல்லோரிடமும் மகிழ்ச்சியாக விடை பெற்றார். போட்டியாளர்களின் முகத்திலும் பயங்கர குஷி தெரிந்தது. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் சிநேகன் நன்றி சொன்னார். சுஜாவின் முகத்தில் உற்சாகம் குறைந்திருந்தது.

Bigg Boss

கமல் அரங்கிற்குள் வந்தார். வெளியேற்றப்படவிருக்கிறவர் எவர் என்கிற விடை தயாராக இருந்தது. ஆரவ் மற்றும் வையாபுரியில் எவர் வெளியேறுவார் என்று நினைக்கிறீர்கள்? என்று பிந்துவிடம் கேட்டார் கமல். சிவாஜி போல அப்போதே கண்கலங்கத் துவங்கி விட்டார் பிந்து. ‘No Eviction day’வாக இருந்தால் நன்றாக இருக்கும். இந்த வீட்டில் நுழைந்தபோது நான் தனியாகத்தான் அமர்ந்திருப்பேன். வையாபுரி அண்ணன் தாமாக முன்வந்து என்னிடம் பேசுவார். பல உதவிகளைச் செய்தார். இந்த வீட்டில் என்னுடைய முதல் நண்பர். அவர் மேல் எனக்கு பெரிய மரியாதையுள்ளது” என்று பிந்து நெகிழ்ந்தார். ஆரவ்வைப் பற்றி சுஜாவிடம் விசாரித்தார் கமல். அமைதியாக இருந்த சுஜா ‘என்னால் சொல்ல முடியவில்லை” என்று சைகையில் சொன்னார்.

“நான் இங்க வந்ததுல இருந்து ஆரவ் கூட க்ளோசாகிட்டேன். வையாபுரி அண்ணன்தான் எங்க எல்லோருக்கும் என்டர்டெயிண்மெண்ட். எத்தனை கஷ்டம் இருந்தாலும் சிரிக்க வெச்சிடுவார். அதனால யாரு போனாலும் கஷ்டமாத்தான் இருக்கும். நான் போனா சந்தோஷப்படுவேன். என்று நெகிழ்ந்தார் ஹரீஷ். வையாபுரி வயதில் மூத்தவர் என்பதால் அது சார்ந்த மரியாதையுடன் அவருடைய நகைச்சுவையுணர்வு ஆகியவற்றை இதர போட்டியாளர்கள் புகழ்ந்தனர்.

Bigg Boss

கமலின் சமயோசித நகைச்சுவையை நான் பல சமயங்களில் வியப்பேன். சினிமாக் காட்சிகளில் மட்டுமல்ல, மேடையில், நேர்காணல்களில் பேசும் போது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் நகைச்சுவையுணர்வையின் கூர்மையை நெருக்கமாக உணர முடிந்தது.

‘இந்த வீட்டில் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் நூல் மாதிரி இணைத்து ஒரு மணியாக்கும் நபராக வையாபுரி இருந்தார்” என்று சிநேகன் பாராட்டிக் கொண்டிருந்தார்.

“ஓ.. அதனால்தான் நூல் கோர்க்க அத்தனை சிரமப்பட்டாரா?” என்று ஒரு அட்டகாசமான சிக்ஸர் அடித்தார் கமல்.

பெட்ஷீட் தைக்கும் ஒரு போட்டியில் வையாபுரி பட்ட சிரமம் அது. அந்த விஷயத்தையும், ‘நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ள போட்டியாளர்களை இணைப்பது எத்தனை சிரமம்’ என்பதையும் இணைக்கும் வகையில் கமல் அடித்த அந்த கமெண்ட்.
ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு எவிக்ஷ்ன் கார்டில் இருந்த வையாபுரியின் பெயரைக் காட்டினார் கமல். வையாபுரியின் முகத்தில் பெரிதாக எந்தவொரு சலனமும் இல்லை. இதற்காக தயாராக இருந்தது போலவே தோன்றியது.

Bigg Boss

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் எவர் வெளியேறினாலும் அரங்கத்திற்குச் சென்று கமலுடன் உரையாடிய பிறகே அவரைப் பற்றிய இனிமையான நிகழ்வுகள் அடங்கிய குறும்படம் ஒளிபரப்பாகும். வீட்டினுள் இருக்கும் இதர போட்டியாளர்கள் அந்தக் குறும்படத்தைப் பார்க்க முடியாது. ஆனால் விதிவிலக்கு ஆச்சர்யமாக, பிக் பாஸ் வீட்டின் உள்ளேயே வையாபுரியைப் பற்றிய குறும்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

அனைவரும் உற்சாகத்துடன் நெகிழ்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். வையாபுரி முன்னர் கண்கலங்கிய நிகழ்வுகளைப் பார்த்து அவரே இப்போது கலங்கினார். பிந்துவின் கண்கள் கலங்கியபடியே இருந்தன. “யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைச்சதில்லை. ரொம்ப நன்றி” என்றார் வையாபுரி. ‘என்னைத் தெரியாதவர்களுக்கு தெரிய வைத்த, என்னை எனக்கே தெரிய வைத்த, தெளிய வைத்த, பிக் பாஸிற்கும் விஜய் டிவிக்கும், கமல் சாருக்கும், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்றி” என்று சிநேகனை எழுத வைத்து போர்டில் கையெழுத்திட்டார் வையாபுரி.

“இதே மாதிரி கலகலப்பா இருங்க. யார் வெற்றி பெற்றாலும் மத்தவங்க அவங்களுக்கு உறுதுணையா இருங்க. வாழ்த்துகள். நூறாவது நாள்ல சந்திக்கறேன்” என்று வையாபுரி விடைபெற்றார். எல்லோரும் அவரிடம் பிரியாவிடை தந்தனர். பிந்து மாத்திரம் அதிக நெகிழ்ச்சியுடன் இருந்தார். “இதோ இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கு. உடனே பார்க்கப் போறோம். அப்புறம் என்ன?” என்று ஆறுதல் சொன்னார் வையாபுரி. ‘hi buddy’ என்று வழியனுப்பி வைத்தார் பிந்து. ஹரீஷால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பிந்து அமைதியாக சென்று உட்கார்ந்து விட்டார். சுஜா வையாபுரி சென்ற திசையையே பார்த்தபடி தயங்கி நகர்ந்தார்.

Bigg Boss

கமல் பாசமாக அழைத்தவுடன் வையாபுரி அரங்கத்திற்குள் வந்தார். பார்வையாளர்கள் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றனர். “உள்ளே போன வையாபுரி வேற. வெளியே வந்த வையாபுரி வேற. இல்லையா?” என்று ஆரம்பித்தார் கமல். “ஆமாம் சார்.. முதல்.. இரண்டு, மூன்று வாரத்தில் வெளியே வந்திருந்தால் இத்தனை உணர்ந்திருக்க மாட்டேன். 84 நாட்கள் கடந்து வரும் போது பல விஷயங்களை உணர்ந்துவிட்டேன்” என்றார் வையாபுரி.

“எல்டாம்ஸ் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லலாமா?” என்று வையாபுரியிடம் சம்பிரதாயத்திற்கு அனுமதி கேட்டு விட்டு விஷயத்திற்குள் வந்தார் கமல். ‘வையாபுரிக்கு அப்ப சின்ன வயது. ‘அவ்வை சண்முகி எடுத்திட்டிருந்தோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது வையாபுரியும் இணைந்து கொண்டார். “அந்தப் படத்துல எனக்கு சின்ன சீன்தான்.. பாத்திரத்தின் படி என் பேரு ராஜா… அந்தப் பேரு ரொம்ப வழக்கமா இருக்கேன்னு கமல் சார் என்னிடம் பெயரை விசாரித்தார். வையாபுரின்னு சொன்னவுடன் அதையே வெச்சிடுவோம்’னார். என் பெயரை திரையில் கேட்கும் போது மகிழ்ச்சியா இருந்தது’ என நெகிழ்ந்தார் வையாபுரி.

“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆறு படங்கள் பண்ணியிருக்கோம். (12 படங்கள் என்று திருத்தினார் வையாபுரி). பார்த்தீங்களா டபுள்ளா இருக்கு. அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ அந்தப் படம் சரியாப் போகலை. ஆனால் அதில் மனுஷன் பின்னியிருப்பார். அதற்கப்புறம் ரொம்ப காலம் கழிச்சு என்னோட வீட்ல இவரோட பேசிட்டு இருந்தேன். ‘என்ன வையாபுரி. படங்கள்லாம் பண்ணிட்டு இருக்கீங்களான்னு விசாரிச்சேன். ‘இல்ல சார். எனக்கு திறமை இருக்கான்னு சந்தேகம் இருக்கு –ன்னார். அவர் திறமை மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. நான் வெறும் வேஷம்தான் கொடுத்தேன். ஆனா நீங்க பிக் பாஸ் மூலமா நட்சத்திர அந்தஸ்து கொடுத்தீட்டீங்க. நன்றி” என்பதாக கமலின் உரை அமைந்தது.

“கணேஷ் இதுவரைக்கும் கண்கலங்கினதேயில்லையாம். ரிலேஷன்ஸ் இறந்தா கூட கலங்க மாட்டாராம். நான் வெளியே வந்ததுக்கு அழுதுட்டார்” என்று நெகிழந்தார் வையாபுரி. “ஆம். ரியாலிட்டி ஷோன்றாங்க.. இதெல்லாம் சும்மாங்க.. எல்லாம் நடிப்பு –ன்றாங்க…. நான் ஒரேயொரு சின்ன சவால் விடறேன். எனக்கு பெரிய நடிகைகளையெல்லாம் தெரியும். இப்ப பிந்து கண்கலங்கினாங்க இல்லையா, அதே மாதிரி அழுது நடிக்க சொல்லிடுங்க பார்க்கலாம் முடியாது. எனக்கே கூட அந்த மாதிரி காட்சிகள்ல நடிக்கும் போது மிகையாகி விடுமோன்னு சந்தேகம் வந்துடும். மக்கள் அதை சரியா கண்டுபிடிச்சுடுவாங்க. அதனால பாக்கெட்ல ஒரு விமர்சகனை வெச்சுக்கிட்டே நடிப்பேன்” என்றார் கமல்.

“அது சரி. நீங்க முதல் ரெண்டு வாரத்துலயே போயிடுவீங்கன்னு முதல்ல நெனச்சேன்” என்று வையாபுரியை நோக்கி கேட்டார் கமல். “ஆமாம் சார். சினிமாவுலயும் சரி, வெளிலேயேயும் சரி. எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. வீட்டுக்குள்ள கோப்பட்டுக்கிட்டு இருப்பேன். ஆனால் இங்கு வந்தபிறகுதான் உறவுகளின் அருமை தெரியுது. எனக்கு அப்பா கிடையாது. மாமனார் இருக்கார். ஆனால் ஒருமுறை கூட அவரை நான் மாமா –ன்னு கூப்பிட்டது கிடையாது. என் மனைவிக்கு கூட இதில் ஆதங்கம். அவருக்கு பிள்ளை இருந்தாலும் ‘வையாபுரிதான் எனக்கு கொள்ளி போடணும்’னு சொல்லிட்டாராம். “நீங்க அவரை அப்பான்னு கூப்பிடணும்னுதான் அப்படி சொல்லியிருக்கார் போல –ன்னு என் மனைவி சொன்னாங்க” என்று நெகிழ்ந்தார் வையாபுரி.

ஆம். ஒற்றை பிள்ளைகள் இருக்கும் குடும்பம் பெருகி விட்டதால், அப்பா வழி, அம்மா வழியான உறவினர்கள் இருப்பதே அருகிப் போய்க் கொண்டிருக்கும் போது இருக்கிற உறவுகளை அந்த அடையாளத்துடன் கூப்பிடுவது குறைந்து விட்டது. அது சார்ந்த கூச்சம் இருக்கிறது. பொதுவாக நகரங்களில் இந்தக் கலாசாரம் நிறைய. நான் உட்பட, மாமனாரை ‘சார்.. நீங்க.. வாங்க..’ என்று பொதுவாக அழைப்பதே நிறைய பேர்களின் வழக்கமாக இருக்கிறது.

“உங்க மச்சானை.. தம்பின்னு கூப்பிட்டிருக்கீங்களா?” என்றார் கமல். தனது உறவுகளை அந்த அடையாளத்துடன் உரக்க கூப்பிட்டு சந்தோஷப்பட்டார் வையாபுரி. “இப்ப மனது நிறைவா இருக்கு சார்”

“நான் எத்தனையோ பத்திரிகை பேட்டிகளிலும் சொல்லியிருக்கேன். வீட்ல பேசும் போதெல்லாம் அப்பா அம்மாவிற்குப் பிறகு கமல் சார் –ன்றதைத்தான் அதிகம் சொல்லியிருக்கேன். உங்க படம்னா நான் அதில் கட்டாயம் இருப்பேன்ற மாதிரி ஒரு சூழல் உருவாகிடுச்சு. அதுக்கு நீங்கதான் காரணம். ரஜினி சாரைப் பார்க்க போதும் கூட ‘என்னை விசாரித்து விட்டு கமல் கூட நெறய படம் பண்ணியிருக்கீங்க போல’ன்னு சொன்னார். சந்தோஷமாக இருந்தது” என்றார் வையாபுரி. “என் நண்பர் ரஜினி என் படங்களை அத்தனை உன்னிப்பா பார்த்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமை. நன்றி” என்றார் கமல்.

“இப்ப என்ன மிஸ் பண்ணுவீங்க?” என்று கேட்டார் கமல். “உள்ளே பழகிய அத்தனை பேரையும் மிஸ் பண்ணுவேன். உள்ளே சிலர் அப்பான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.. அண்ணன்னு உறவு சொல்லியே கூப்பிட்டாங்க..” “ஆமாம்.. நாம British Colonial children – ஆ வளர்ந்துட்டோம். உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டக்கூடாது என்பது கற்றுத்தரப்பட்டது. நாடகக்குழுவில் சண்முகம் அண்ணாச்சியை ‘அண்ணாச்சி’ன்னுதான் கூப்பிடுவோம். மத்தவங்களையும் அண்ணா.. அக்கா ‘ன்னுதான் கூப்பிடணும். வேற மாதிரி கூப்பிட்டா கேவலமாக நென்ப்பாங்க.. சரி.. இனிமே நீங்க என்னை கமல் சார் னு கூப்பிடக்கூடாது” என்றார் கமல். “அண்ணன்னு கூப்பிடறேன்” என்றார் வையாபுரி. கமலின் கட்டை விரல் உயர்ந்தது.

**

“சரி.. வீட்டுக்குள்ள போனவுடனே ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும்?” என்று ஜாலியாக விசாரித்தார் கமல். “பார்த்தவுடனே பொண்டாட்டி நிச்சயம் கட்டிப்பிடிச்சு அழுவா.. ஆனால் பொண்ணும் பையனும் நிச்சயம் திட்டுவாங்க.. அதுக்குள்ள என்ன அவசரம், ஜெயிச்சுட்டு வர வேண்டியதுதானே, எப்ப பாரு காமிராவை பார்த்து அழுதிட்டே இருந்தா எப்படி?.. நீங்க வீட்டுக்குள்ள வர வேணாம். அப்படியே மொட்டை மாடிக்கு போயிடுங்க.. அங்கயே சாப்பாடுல்லாம் வரும். பிக் பாஸ் வீடு மாதிரி நூறுநாள் முடிஞ்ச பிறகுதான் வீட்டுக்குள் வரணும்-னு சொல்லுவாங்க”

“பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவங்களைப் பற்றி ஒரு வரில சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டார் கமல். “Sri – தூக்கத்துல நடக்கறவன். அனுயா – ரெண்டு மணிக்கு குளிக்கறவ. ஆரவ் – என்றதும் ரோமியோ மாதிரி சைகை செய்தார் வையாபுரி. கஞ்சா கருப்பு –என்றதும் அவரை மாதிரியே வட்டார வழக்கில் மிமிக்ரி செய்ய ஆரம்பித்து விட்டார். “சுருக்கமா பண்ணுங்க” என்றார் கமல். ரைசா என்றதும் தூங்கியெழுந்தவுடன் மேக்கப் போடுவதை வையாபுரி செய்து காட்டினார்.

ஒற்றை வார்த்தையில் சொல்லாமல் எல்லோரைப் போலவும் வையாபுரி செய்து காட்டியதைக் கிண்டலடித்த கமல், ‘பார்த்தீங்களா.. நடிகர்கள் மேடை கிடைச்சுதுன்னா.. விட மாட்டாங்க” என்றார். இவர் அதை சாதாரணமாகச் சொன்னாரோ, அரசியல் நையாண்டியாகச் சொன்னாரோ, தெரியவில்லை. அவர் அப்படி நம்மை பழக்கி விட்டதால் அரசியல் நையாண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எடுத்துக் கொள்ளலாம், என்ன இப்ப?

“சுருக்கமாக பண்ணுங்க வையாபுரி” என்று கமல் பலமுறை சுட்டிக் காட்டியும் அடக்கமாக செய்ய வையாபுரியால் இயலவில்லை. கணேஷைப் பற்றியும் நமீதாவைப் பற்றியும் நீளமான ஆலாபனைகளாக நடித்துக் காண்பித்தார். பார்வையாளர்களால் எளிதில் கண்டுகொள்ள முடிந்தது. கமல் எதிர்பார்த்தது அதையல்ல என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் நடித்து பழகிப் போன வையாபுரியால் subtle ஆக நடிக்க முடிந்தால்தான் ஆச்சர்யம்.

“யார் ஜெயிப்பாங்க’ன்னு நெனக்கறீங்க” என்று கமல் கேட்டார். ‘ஆரவ், சிநேகன், கணேஷ் ஆகிய மூவரும் இறுதிப் போட்டியில் நிச்சயம் வருவார்கள். இளைஞர்கள் என்பதால் உடல்திறன் சார்ந்த போட்டிகளில் ஆரவ்விற்கும் கணேஷிற்கும் இடையே பலத்த போட்டி இருக்கும்.” என்கிற தன் யூகத்தை வையாபுரி சொன்னவுடன் “சரி, வீட்டுக்குப் போனதும் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன். நூறாவது நாள் விழாவிற்கு கட்டாயம் வரணும்:” என்ற கமல் வையாபுரியை அன்புடன் வழியனுப்பி வைத்தார். பார்வையாளர்களின் உற்சாகக் கூக்குரல்களுக்கு இடையில் கிளம்பி சென்றார் வையாபுரி.

**

“நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. நமக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. இதுவரை ஏறத்தாழ சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தீர்கள். இடையில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். இறுதியில் சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறேன்.” என்ற கமல்.. “இப்பவும் நான் பிக்பாஸ் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்களாக ஏதும் தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள். என் கடமையையும் இடையில் நான் செய்ய வேண்டும் இல்லையா? என்ற படி விடைபெற்றார் கமல். சொல்றதையெல்லாம் சூசகமாக சொல்லிட்டு, அப்புறம் அதை மழுப்புகிற பாவனையை கமல் செய்வது சுவாரசியமாக இருந்தாலும் மிகையாகவும் ஆகிவிடக்கூடாது. நடிப்பில் மிகையானால் கண்டுபிடிக்கிற பார்வையாளர்கள், இதையும் கண்டுபிடித்து விடுவார்கள்.

எல்லா உணர்ச்சி மோதல்களையும் நகைச்சுவையின் வழியாக எளிதாக கடந்து வர முடியும். வையாபுரி இல்லாத வீடு, இனி சிரிப்பு சப்தங்கள் குறைந்து வெறுமையாக காணப்படலாம். ‘நாளை’ என்று காட்டப்பட்ட பகுதியில் சுஜா வின் எரிச்சல் கலந்த கோபம் காட்டப்படுவது அதற்கான முன்னோட்டமாக இருக்கிறது. பார்ப்போம்.

83-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்ததை அறிய இங்கே க்ளிக் செய்யவும்…

Source: vikatan