குழந்தைகளுக்கு முன் மாதிரி ஒருவரைச் சொல்வற்கும் மற்றவரோடு ஒப்பிடுவதற்கு என்ன வித்தியாசம்?

“எப்போ பாரு டிவியையே பார்த்துட்டே இருக்கிறது… பக்கத்து வீட்டு ஆகாஷைப் பார்…. ஸ்கூல் விட்டு வந்ததும் படிக்க ஆரம்பிடுறான்” இந்தத் தொனியில் தங்கள் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் பேசுகின்றனர்.

ஒரு குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று அவரைப் போலதான் இல்லையே எனும் தாழ்வு மனப்பான்மை. அடுத்து, ஒப்பீடாக இருப்பவர் மீது உருவாகும் வெறுப்பு. இவை இரண்டுமே உங்கள் பிள்ளையின் மனநிலையைச் சிதைக்கக்கூடியவைதான். தாழ்வு மனப்பான்மை தன்னை மற்றவர்களிடமிருந்து விலகச் செய்துகொன்டு தனிமையைக் கொடுத்துவிடும். வெறுப்பு என்பது அடுத்தவர் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அளவுக்கு மாற்றிவிடும். எனவே ஒருவரோடு ஒப்பிட்டு உங்கள் குழந்தையின் பழக்கத்தை மாற்ற முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

“ஒப்பிடுவது தவறு. சரி. ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவரைப் போலப் படித்து நல்ல நிலைக்கு வா…. அவரைப் போலப் பயிற்சி எடுத்து விளையாடி வெற்றிப் பெறு’ என்று சொல்லக்கூடாதா? அப்படிக் கூறுவதையும் மற்றவரோடு ஒப்பிடுகிறோம் என்பதாகவே சொல்வீர்களா?” இப்படிப் பலரும் கேட்பதுண்டு. உண்மையில் பார்த்தால் ஒப்பீடு – முன் மாதிரி இவை இரண்டும் மெல்லிய வேறுபாடுகள்தான் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்வதும் குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒன்றுதான்.

child

தவறு செய்வது என்பது தவிர்க்கவே முடியாத இயல்பு. தவறு செய்யும் குழந்தையை, மற்றவரின் செய்கையோடு இணைத்து ஒப்பிட்டுப் பேசுகிறோம். இதை நமது குழந்தையின் செயலைத் திருத்துவதற்கு எனச் செய்கிறோம். ஆனால், நாம் முன்பு சொன்னதுபோலப் தாழ்வு மனப்பான்மையும் வெறுப்பும் நமது குழந்தையின் திறமைகளை மழுங்கடித்துவிடும். அதே சமயம் ஒருவரை ரோல் மாடாக முன்னிருத்தும்போது அது நம் குழந்தை செய்யும் தவற்றைத் திருத்தும் நோக்கில் நாம் சொல்ல வில்லை. அதனால் குழந்தையும் அதேபோல யோசிக்காது.

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள பிள்ளையிடம் சச்சினை ரோல் மாடலாகச் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சச்சின் வளர்ந்த சூழல், பயிற்சியில் காட்டிய அக்கறை, தோல்வியில் துவண்டுவிடாமல் போராடியது, விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் களமிறங்கியது…. உள்ளிட்ட பல விஷயங்களைச் சொல்வோம். அப்படிச் சொல்லும்போது அவரோடு உங்கள் குழந்தையை ஆங்காங்கே ஒப்பிடத்தான் செய்வீர்கள். ஆனாலும், தான் ஆர்வத்துடன் இருக்கும் துறையில் சாதித்த ஒருவரைப் பற்றிச் சொல்லும்போதும் ஒப்பிடும்போதும் அதை நெகட்டிவ் விஷயமாகக் கருதுவதற்கு வாய்ப்பில்லை.

‘ரோல் மாடல் என்றதுமே சச்சின், சிந்து, மித்தாலி ராஜ், விஸ்வநாதன் ஆனந்த்… இவர்களைத்தான் சொல்ல வேண்டுமா?’ என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மைதான். ஒரு சிறு திருத்தம் இவர்களையும் சொல்ல வேண்டும். அந்த மாவட்டத்தில், அந்த ஊரில் உள்ளவர்களையும் நாம் ரோல் மாடலாகக் கூறலாம். ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் ரோல் மாடல்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டாம். நல்ல பழக்கங்களை, பேசுவதில் இயல்பாக, பழகுவதில் சாதி, மத, பாலின வேறுபாடுகளைக் கடைபிடிக்காமல் இருக்கவும் நல்ல ரோல் மாடல்களை அறிமுகப்படுத்தலாம்.

ரோல் மாடல்களைப் பற்றிக் கூறும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரை எதன் நோக்கில் பின்பற்ற சொல்கிறோம். அதை மட்டும் கவனிக்க உங்கள் குழந்தையைப் பழக்க வேண்டும். அவரின் தனி மனித விஷயங்களில் சில முரண்பட்டவை இருக்கலாம். அவற்றைக் கழித்துவிடவும் குழந்தைகளிடம் கூற வேண்டும். இல்லையெனில் அவரை ஜெராக்ஸ் எடுக்கத் தொடங்கிவிடுவர். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒப்பீடு என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதை நேரடியாகவே மறைமுகமாகவோ சொல்வது, முன்மாதிரி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. திட்டமிட்டு முன்நகரச் செய்வது. இந்த வேறுபாட்டை பெரியவர்களை விட குழந்தைகள் மிக விரைவாகப் புரிந்துகொள்வார்கள். எனவே நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

Source: Vikatan