காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்!

Chennai: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் உள்ளார். இதனால், கட்சித் தலைவர் பொறுப்பை தன் மகன் ராகுலிடம் ஒப்படைக்க அவர் முடிவுசெய்துள்ளார். மூத்த தலைவர்களும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ராகுல் காந்தி, இப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கு, அக்கட்சியின் காரியக் கமிட்டியின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். இதற்காக, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 5-ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற, டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால், டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 19-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதால், அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, டிசம்பர் 11-ம் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பெற்றார் சோனியா காந்தி. 19 ஆண்டுகாலம் தலைவர் பதவி வகித்த அவர், டிசம்பர் மாதத்தோடு விடைபெறுகிறார்.

Source: Vikatan

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கலப்புத் திருமணம்செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22), கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று, உடல்நலம் தேறினார்.

பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச் சாய்க்கப்பட்ட சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக, கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் டிசம்பர் 12 – அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

Source: Vikatan

சென்னை மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டு முன் தேர்வு ரத்து!

Chennai: சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரையாண்டு முன் தேர்வுகள் (2nd Midterm) ரத்து செய்யப்படுவதாக முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகச் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் Truncated பள்ளிகளுக்காக 10 முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்டத் தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்செயல்முறைகளுடன் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு முன் தேர்வுகள் (Pre Half yearly exams) தொடர் மழையால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஆசிரியப் பெருமக்கள் பாடங்களை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களின் வேண்டுகோளுங்கிணங்க மேற்காணும் அரையாண்டு முன் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 31-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்ட பள்ளிகளில் முன்அரையாண்டுத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்தது.

ஆளும் கட்சியினரின் கண்காணிப்பில் தீக்குளித்தவர்களின் உடல்கள் தகனம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் உடல்களைக் காவல்துறையினர் மிரட்டி உறவினர்களிடம் வழங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கிமுத்து அவர் மனைவி சுப்புலட்சுமி அவர்களின் குழந்தைகள் மதி சரண்யா என்ற 5 வயது குழந்தையும் அட்சய பரணிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் நேற்று தீக்குளித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் இசக்கிமுத்துவைத் தவிர மூன்று பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை, வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

உடனே காவல்துறையினர், இசக்கிமுத்துவின் தம்பி கோபியை மிரட்டி வலுக்கட்டாயமாக உடலை ஒப்படைத்துள்ளனர். உடலை வாங்காவிட்டால் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். திருநெல்வேலி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் சுதா கே.பரமசிவன் தலைமையில், மூன்று உடல்களும் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், மூன்று உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல், சுதா பரமசிவன் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே, சிந்துபூந்துறையிலுள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.

தீக்குளித்து இறந்தவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், உடலை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்துள்ளனர். ஆளும் அரசைச் சேர்ந்தவர்களும் காவல்துறைக்கு உறுதுணையாகச் செயல்பட்டுவருகின்றனர்.

Source: Vikatan

இதுக்கேவா.. மெர்சல்ல நீக்கப்பட்ட காட்சிகள் தோ வந்துட்டே இருக்கு – எடிட்டர் ரூபன்

இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது ‘மெர்சல்’. இந்தப் படம் ரிலீஸானதில் இருந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டுமென்று பாஜகவை சேர்ந்த தமிழிசை, ஹெச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், எதற்காக ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கமல் உட்பட சினிமாவைச் சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

ஆளுக்கொரு திசையில் ‘மெர்சல்’ திரைப்படத்தின் காட்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” அடேய் படத்துக்கு நான்தான் டா எடிட்டர்”னு பதிவியிட்டிருக்கிறார். மெர்சல் சர்ச்சைகள் குறித்து அவருடன் பேசினேன்.

”அம்மா சென்னை, அப்பா கும்பகோணம். பிறந்தது சென்னை கல்யாணி ஹாஸ்பிஸ்டல்தான். பட், ஸ்கூல் படிச்சது எல்லாம் கும்பகோணம். அப்பாவுடைய பக்கம் பார்த்தால் மூன்று தலைமுறைகளாய் மேடை இசைக்குழு நடத்திவரும் இசைக் குடும்பம். கலை என்பது என் வாழ்க்கையில் சின்ன வயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். அதனாலேயே எனக்குப் படிப்பை விடக் கலை மீது ஆர்வம் அதிகம். என்னை பத்தாவது படித்து முடித்தவுடனே சைன்ஸ் குரூப் படிக்கச் சொல்லிதான் சேர்த்தார்கள். பட், எனக்குப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை.

அதனாலேயே, காலேஜ் படிக்கும் போது சென்னையில் லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்தேன். அப்போதுதான் எனக்கு கெளதம் சார் பழக்கம் ஏற்பட்டது. காலேஜ் படிக்கும் போது ஏதாவது இன்டென்ஷிப் செய்யலாம்னு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் முடிவு செய்து கெளதம் மேனன் சாரை போய் பார்த்தோம். அப்போது ‘வேட்டையாடு விளையாடு’ ஷூட்டிங் போயிட்டு இருந்தது.

அந்த நேரத்தில் எல்லோருடனும் கெளதம் வாசுதேவ் மேனன் சார் பேசும் போது ” ப்ரீ டைமில் என்ன செய்றீங்கனு” கேட்டார். நான் உடனே, ” எனக்கு சாப்ட்வேர் நாலேஜ் இருக்கு. அதனால் ப்ரெண்ட்ஸோட ஷார்ட் ஃபிலிம் எல்லாம் எடிட் செய்வேன்” னு சொன்னேன். ‘ஓ அப்படியா, அப்போ நீ எடிட்டர் ஆண்டனிக்கிட்ட எடிட்டரா சேர்ந்துக்கோ’னு சொன்னார். அப்படிதான் எடிட்டர் ஆண்டனி அறிமுகம் கிடைத்தது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வரைக்கும் கெளதம் சார்கிட்டதான் இருந்தேன்.

அவரிடம்தான் எல்லாவற்றையும் கத்துக்கிட்டேன். ” வேட்டையாடு விளையாடு’ படத்தின் போது கமல் சாருடன் ஒரு சின்ன ஷாட்டில்கூட நடித்திருப்பேன். அப்படியே லைப் போயிட்டு இருந்தபோதுதான் 2011 ஆம் வருஷத்தில் ‘கண்டேன்’ படத்துக்கு முதல் முறையாய் எடிட்டர் ரூபனாய் அறிமுகமானேன். இப்போது ‘மெர்சல்’ வரைக்கும் முப்பது படம் பண்ணிட்டேன். இதுதான் என் சின்ன ப்ளாஷ் பேக்’’ என்றவரிடம் அட்லியின் முதல் அறிமுகம் பற்றிக் கேட்டோம்.

’’என்னுடைய முதல் ஹிட் திரைப்படம் ‘ராஜா ராணி’தான். அதன் வெற்றியை என்னால் மறக்கவே முடியாது. எனக்கான ஒரு அங்கீகாரத்துக்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ‘ராஜா ராணி’ வாய்ப்பு வந்தது. எப்போதும் கன்டென்ட்தான் ஜெயிக்கும். அதற்காகத் தான் நம்ம வேலைப் பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘ராஜா ராணி’ படத்துக்காக மட்டும் வேலை பார்த்தேன். எனக்கான பெயரை இந்தப் படம்தான் வாங்கிக் கொடுத்தது. எத்தனைத் தெறி, வேதாளம் வந்தாலும் ‘ராஜா ராணி’ தான் ஃபர்ஸ்ட். அதற்கு அட்லிக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்.

‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்துக்கு நான் எடிட்டராக ஒர்க் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நான் எடிட் செய்து கொண்டிருந்த ஸ்டூடியோவில் அட்லியின் ஷார்ட் ஃபிலிம் டப்பிங் போயிட்டு இருந்தது. அட்லியை ஷங்கர் சாரின் உதவி இயக்குநராய் தெரியும். ஜட்ஸ்ட் ஹாய், பாய் சொல்லுற அளவுக்கு ஆன ஒரு ரிலேஷன்ஷிப்தான்.

அன்னைக்கு ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் ட்ரெய்லர் ஒர்க் செய்து முடித்து அதை யாரிடமாவது போட்டு காட்ட வேண்டுமென்று யாராவது இருக்காங்களா என்று தேடி கொண்டிருந்த போது, அட்லி என் இடத்துக்கு ஹாய் சொல்வதற்காக வந்தார். அப்போது, அட்லியை கூப்பிட்டு உட்கார வைத்துப் படத்தின் ட்ரெய்லரை போட்டுக் காட்டினேன்.

அதைப் பார்த்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு அட்லி அந்த ட்ரெய்லரை காட்டினார். அப்போது அட்லி ” நான் படம் பண்ணினால், நீங்கதான் எடிட்டர்” என்று சொன்னார். அப்படிதான் அட்லியின் அறிமுகம் மற்றும் ‘ராஜா ராணி’ தொடர்ந்து ‘மெர்சல்’ வரை வாய்ப்பு கிடைத்தது. என் மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்கான சுதந்திரத்தை அட்லி கொடுத்தார்’’.

’கெளதம் மேனன் படத்தில் எப்போது வொர்க் பண்ணப் போறீங்க’ என்றால், ’’எனக்கும் ஆசையிருக்கு. அவருடன் நிறைய சந்தர்ப்பத்தில் சந்தித்து இருக்கின்றேன். பட், எங்களுக்கான படத்தைப் பற்றி பேசியது இல்லை. என் படங்களை பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு பேசுவார். ‘விவேகம்’ படத்துக்காக செர்பியா சென்று விட்டு சென்னை வந்த போது ஒரே விமானத்தில்தான் இருவரும் வந்தோம். அப்போது நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்’’ என்றவர் தொடர்ந்தார்.

’’ ‘மெர்சல்’ படத்தில் நிறைய சீன்ஸ் எடிட் செய்வதற்கு இருந்தது. காதல், அப்பா, மாஸ் சீன்ஸ் என்று எல்லாமே. எனக்கு அப்பா விஜய் வெற்றி மாறன் சீன்ஸ் எடிட் செய்த போது ரொம்ப பிடித்திருந்தது. இந்தப் படத்தில் முதலில் எடிட் செய்தது அந்த சீன்ஸ்தான். எனக்குப் பிடித்த சீக்வென்ஸ் சீன்ஸூம் அதுதான். அந்த சீக்வென்ஸ் சீன்ஸ் எடிட் செய்வதற்கு நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். படத்தில் நிறைய கேரக்டர்ஸ், கன்டென்ட் இருந்தது. அது எல்லாத்தையும் ஒரு மூன்று மணி நேரத்துக்குள்ளே கொண்டு வரணும்னு நினைத்தபோது இதற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருந்தது.

நிறைய காமெடி சீன்ஸ், லவ் சீன்ஸ் எல்லாம் எடிட் செய்து, பிறகு நேரம் அதிகமானதான் அதனையெல்லாம் எடிட் செய்தோம். பட், எடிட்டிங் பொருத்தவரைக்கும் எனக்கு நிறைய சுதந்திரத்தை அட்லி கொடுத்தார். சில சீன்ஸ் வேண்டும், வேண்டாம் என்று எங்களுக்குள் வாக்குவாதம் எல்லாம் நடக்கும். அதற்கான தேவை மற்றும் புரிதலை புரிந்து கொண்டு இருவரும் வேலைப் பார்த்தோம். படம் சென்சாருக்கு போறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ளேயே நிறையப் பேசி முடிவு செய்துதான் அனுப்பினோம்.’’

எடிட் செய்யும் போது சில காட்சிகள் இந்தளவுக்குச் சர்ச்சைக்குள்ளாகும்னு நினைத்தீர்களா?

’’இல்லை, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏன்னா, படத்தில் சமூக தொடர்பான சில விஷயங்களைத்தான் சொல்லியிருந்தோம். நம்ம பாக்கும் போது நல்லதானே இருக்கிறது என்றுதான் தோன்றியது. தப்பாக எதுவும் தெரியவில்லை. அதையும் மீறி படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகுமா இல்லையா என்பதை நம்ம சொல்ல முடியாது. ஏன்னா, சென்சாருனு ஒரு விஷயம் இருக்கு.

சென்சார் போர்ட்டில் சொன்ன சில விஷயங்களை நாங்களும் ஏத்துக்கிட்டுதான் சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறோம். ஒரு தடவைக்கு மூன்று முறைப் பார்த்துத்தான் சென்சார் போர்ட் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அவங்களும் படத்தை முழுமையாக பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் எந்தக் காட்சியும் சேர்க்கவில்லை. இது எல்லாத்தையும் மீறி படம் ரிலீஸானதுக்கு பிறகு இப்படி சர்ச்சைக்குள்ளாகும் என்று நினைக்கவில்லை.’’

சர்ச்சை ஆனது எந்த மாதிரியான ஒரு ஃபீல்லை உங்களுக்கு கொடுத்திருக்கு?

’’உண்மையை சொல்லணும்னா, சினிமா ஒரு கலை. படத்தின் கன்டென்ட்டில் இருக்கக்கூடிய ஒரு டயலாக்கை ஒரு நடிகர் சொல்லியிருக்கிறார். அதற்காக, அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது தப்பு. கருத்து சுதந்திரம் என்பது எங்கயிருக்கு என்ற கேள்வியைத்தான் இது எழுப்புகிறது. நம்ம வாழ்றதுக்கு நம்மதான் வரி கட்டுறோம். தேவையில்லாத விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கு. சினிமாவை ஒரு பிரச்னையாக எடுத்து வைத்துப் பேசுவது சரியில்லை.

சில காட்சிகளை நீக்கச் சொல்வது வருத்தப்படக் கூடிய விஷயம்தான். ஹாலிவுட்டிலும் படங்கள் எடுக்குறாங்க. கவர்மெண்ட்யை டார்க்கெட் பண்ணிக்கூட காட்சிகள் வைக்குறாங்க. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சென்சார் போர்ட் அனுமதித்த ஒரு படத்தை பார்த்து சரியில்லைனு சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.’’

‘மெர்சல்’ படத்தில் உங்கள் எடிட்டிங்யை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்?

’’இந்தப் படத்தின் ஆடியோ லான்சின் போதுதான் விஜய்யை பார்த்தேன். அப்போதே என்னைப் பாராட்டினார். படத்தின் டீசர் வெளியான உடன் என்னைக் கூப்பிட்டு நல்லாயிருக்குனு சொன்னார். ‘தெறி’ படத்துக்காக எனக்கு இருந்த நேரம் ‘மெர்சல்’ படத்துக்காக இல்லை. அதனால், மெர்சல் டீசர் மூன்று மணி நேரத்திலேயே ரெடி பண்ணினேன். டீசருக்கு ரொம்ப மெனக்கெட்டேன். டீசர் பார்த்தவுடன் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது.

இந்தப் படத்தின் நீளம் எடிட்டிங் செய்யும் போது இதைவிட அதிகமாகவே இருந்தது. அதை எல்லாம் சுருக்கி படத்துக்குத் தேவையான விஷயங்களை மட்டும்தான் கொடுத்தோம். அதே போல் தமிழ் சினிமாவில் பாடலுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுப்போம். ஒரு பாட்டுக்கு ஐந்து நிமிடம் என்று வைத்தால் கூட பாட்டுக்காக மட்டுமே அரைமணி நேரம் சென்று விடும். இதுதான் ஆங்கில படத்துக்கும், தமிழ்ப் படத்துக்கும் இருக்கிற வித்தியாசம்.

மாஸ் ஹீரோ படத்துக்காக சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் இந்தப் படத்தில் ஆக்டர்ஸ், காமெடியன்ஸ் என எல்லோரும் பெரிய ஆட்கள். எல்லோருக்கும் சமமான இடம் கொடுக்கணும். படத்திலும் நிறைய எமோஷன்ஸ் இருக்கு. அதனால் எல்லோவற்றையும் சேர்த்துக் கொடுக்கும் போது டைம் எடுக்கத்தான் செய்யும்.’’

மெர்சல் படத்தின் எடிட்டிங் போது எந்த இடத்திலாவது எமோஷனல் ஆகியிருக்கீங்களா?

”நிறையவே. பேஸிக்காகவே நான் ரொம்ப எமோஷனல் டைப். அதனால், இந்தப் படத்தின் எடிட்டிங் போது அந்த அனுபவம் நிறையவே இருந்தது. ப்ளாஷ்பேக் காட்சியை எடிட்டிங் செய்யும் போது என்னையே அறியாமல் எமோஷனல் ஆகி விட்டேன். கண்ணீல் இருந்து கண்ணீர் வந்து கொண்டேதான் இருந்தது. அட்லி படத்தில் எப்போதும் எமோஷனலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்தப் படத்தில் கேட்கவே வேண்டாம்”.

ட்விட்டரில் ‘மெர்சல்’ படத்துக்கு நான்தான் டா எடிட்டர் அப்படினு போட்டியிருந்த ட்விட் பற்றி?

’’அந்த ட்விட் கொஞ்சம் காமெடி டோனில்தான் போட்டிருந்தேன். அவங்க அவங்க வேலையை அவங்க பார்த்தால்தான் நன்றாகயிருக்கும். என் படத்துக்கு நான் தானே எடிட்டர். வரவங்க போறவங்க எல்லாம் எடிட் பண்ணிட்டு போறதுக்கு என் வேலை சும்மாயில்லை. இதற்காக முறையாக நான் பயிற்சி எடுத்து, படித்து, இத்தனை வருடம் உதவி எடிட்டராக இருந்து வந்திருக்கின்றேன். என் படத்தை என்னை எடிட் செய்ய விடவில்லை என்றால் எப்படி.

நான் எப்படி ஜாலியான டைப் என்பது என்கூட இருக்குறவங்களுக்கு தெரியும். அதனால், ஒரு காமெடி டோனில்தான் போஸ்ட் பண்ணியிருக்கேனு தெரிந்து கொண்டு நிறையபேர் போன் பண்ணி பேசினார்கள். கஷ்டம் வரும் சூழ்நிலையில் கூட அதைச் சிரித்து கொண்டேதான் சமாளிப்பேன்.இதைப் பார்த்த எல்லோரும் சிரித்து கொண்டேதான் என்னிடம் பேசினார்கள். நம்மனால நாலு பேர் சந்தோஷமாகயிருந்தா நல்லதுதானே.

இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னாடி கூட நிறைய பிரச்னைகள் இருந்தது. அப்போதும் கூட நாங்க யாரும் சோர்ந்து விடவில்லை. அட்லி இப்போதுகூட போன் செய்து பேசினார். சிரித்துக் கொண்டேதான் பேசினார். பிரச்னைகள் வரும் அதை எப்படி சமாளிக்கணும் அப்படிங்குறதுதான் விஷயம். படத்துல இருக்குற எமோஷனல் காட்சிகளுக்கே செம ரெஸ்பான்ஸ். ஆனா, அதுக்கும் மேல இருக்கிற பல காட்சிகளை நீளம் கருதி குறைச்சுட்டோம். அதுலாம் சீக்கிரமே ரிலீஸ் பண்றோம். அது இன்னும் மெர்சலா இருக்கும்!’’ என்றார்.

Source: Vikatan

‘அ.தி.மு.க பிளவுக்கு இவர்கள்தான் காரணம்’! – கொதிக்கும் தினகரன் ஆதரவாளர்

Chennai: அ.தி.மு.க பிளவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்தான் காரணம் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளர் திருவேற்காடு சீனிவாசன் தெரிவித்தார்.

அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். புழல் ஒன்றியத்தில் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்ட அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு யார் காரணம்?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தலைமையில் அ.தி.மு.க செயல்பட முன்மொழிந்தவர்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உண்டு. பொதுக்குழுவில் சசிகலாவை, பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தீர்மான நகலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர். அடுத்து, சசிகலாவை அ.தி.மு.க-வின் சட்டசபைத் தலைவராகத் தேர்வு செய்து ஆளுநரிடம் அந்தக் கடிதத்தை எம்.எல்.ஏ-க்கள் கொடுத்தனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து நாடகத்தை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலாவும் தினகரனும்தான். சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கட்சி நிர்வாகிகள் அஃபிடவிட்டை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தவர்கள், மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தியதோடு இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரினர். இதனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துக்குப் புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும் சசிகலாவுக்கு அ.தி.மு.க அம்மா என்ற பெயரைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இடைத்தேர்தல் பிரசாரத்தில் தினகரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் மாறிவிட்டார். சசிகலாவையும் தினகரனையும் எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். கட்சிக்குத் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வதுக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளார். இதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னால் சிலர் சென்றுள்ளனர். ஆனால், அடிமட்ட தொண்டர்கள் சசிகலா, தினகரன் தலைமையை ஏற்றுவிட்டனர். வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள கட்சி ஆண்டு விழாவில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பார்கள். பரோல் நிபந்தனை காரணமாக சசிகலாவைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பதவியிலிருக்கும் அவரது ஆதரவாளர்கள் சந்திக்கவில்லை. தினகரன் கூறியதுபோல எடப்பாடி பழனிசாமி தரப்பில் எங்களது ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். தேவைப்படும்போது அவர்கள் வெளியில் வருவார்கள்.

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் வரும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?திருவேற்காடு பா. சீனிவாசன்

ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் இருக்கலாம். ஆனால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். நிலவேம்புக் குடிநீர் போன்ற மக்கள் சேவையில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். இதனால் மக்களும் எங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்வதை இந்த அரசு தடுத்தால் அவர்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். இதனால், நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தில் எங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஆவடி, திருநின்றவூர், திருவேற்காடு, மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், புழல் ஆகிய பகுதிகளில் இலவசமாக நிலவேம்புக் குடிநீரை விநியோகித்துள்ளோம்.

டெங்குக் காய்ச்சலால் மக்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலவேம்புக் குடிநீரை ஆர்வமாகக் குடிக்கின்றனர். உள்ளாட்சித்துறையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் டெங்கு பாதிப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அரசு இயந்திரம் செயலிழந்துவிட்டது. கொசுவைக் கட்டுப்படுத்த எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகளும் எந்த வேலைகளையும் செய்யவில்லை. இது, மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜெயலலிதா ஏற்படுத்திய இந்த ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அதிகாரம் எங்கள் கையில் இல்லை என்றாலும் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் கட்சியும் ஆட்சியும் எங்கள் கைக்கு வரும். அப்போது ஜெயலலிதாவின் கனவு நிஜமாகும்

அ.தி.மு.க. ஆண்டு விழா தினகரன் தரப்பினர் புறக்கணித்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே?

துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே துரோகிகளின் பிடியில் அ.தி.மு.க. தலைமைக் கழகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆண்டு விழாவை நடத்தியுள்ளனர். அதற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் வரும் 24 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த விழாவைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்.

Source: Vikatan

ஸ்டாலினை அணைத்த அமைச்சர்… கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம்! கலகலத்த ஆளுநர் பதவியேற்பு விழா

ஆளுநர் பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அரவணைத்துக் கைகுலுக்கிய சம்பவத்தை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் சிரித்துள்ளார். பிறகு இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். அடுத்து, அமைச்சர் ஒருவர், ஸ்டாலினை அணைத்தப்படி கைகுலுக்கியுள்ளார். ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இதுஎல்லாம் நடக்குமா என்று விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க-வினர் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

அடுத்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி, ஸ்டாலினுக்குப் பின்இருக்கையில் அமர முயற்சிசெய்துள்ளார். அவரை, பின்னால் உள்ள இருக்கையில் அமரும்படி விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அடுத்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், முன் வரிசையில் அமர்ந்ததும், தி.மு.க-வினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து அவரும் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி ஒருவர், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரை, முன்வரிசையில் அமரும்படி சிக்னல் கொடுக்கப்பட்டது.

அப்போது அவர், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருவதுதான் சாலச்சிறந்தது என்று அங்கிருந்து செல்லவில்லை. பதவியேற்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கிய நபரும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த நடிகர் விஜய்கார்த்திக் என்ற ஜெ.எம்.பஷீர் ஆகிய இருவரும் பூங்கொத்து கொடுத்தனர். ஆனால், மக்கள் பிரதிநிதிகளைத் தவிர மற்றவர்கள், ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் மட்டும் எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று மற்றவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்தியாவையும் உலுக்கும் தனிநபர் துப்பாக்கி கலாசாரம்! அதிர்ச்சி ரிப்போர்ட்

தீவிரவாதத்தைவிட தனிநபர் ஆயுதங்கள் கொடூரமானவை. அவை, எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதைத்தான் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசைக் கச்சேரி துப்பாக்கிச் சூடு படம்பிடித்துக் காட்டியது. ஸ்டீபன் பட்டாக் என்ற தனிநபர், கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு மத்தியில் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் பலியாகினர். மேலும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில், ஸ்டீபன் பட்டாக் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்துகள் எழுந்தன. பின்னர் அவர், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் ஒரு கிறிஸ்தவர் என்றும், ஒரு மனநோயாளி என்றும் தகவல்கள் சொல்லப்பட்டன.

இதையடுத்து, ஸ்டீபன் பட்டாக்கின் வீட்டைச் சோதனையிட்டபோது 18 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயிரக்கணக்கான ரவுண்டு சுடக்கூடிய துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. அமெரிக்காவைப் பொறுத்தவரை துப்பாக்கிக் கலாசாரம் என்பது இயல்பான ஒன்றாக இருந்துவருகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள் அரசிடம் முறையாக அனுமதிபெற்று துப்பாக்கி லைசென்ஸ் வாங்கிக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொள்ளாலாம். ஆனால், அது பல சமயங்களில் பேராபத்தாக முடிந்துவிடுகிறது. அதற்கு, இந்தத் துப்பாக்கிச் சூடு சிறந்த உதாரணம்.

‘அமைதி நாடு’ என்று உலக அரங்கில் மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவும் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல… சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையைப் பார்த்தால் அனைவருக்கும் மயக்கமே வந்துவிடும். அதாவது, இந்தியாவில் மொத்தம் 33,69,444 பேர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார்களாம். இந்தியாவிலேயே அதிக துப்பாக்கி உரிமம் பெற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

இங்கு, 12,77,914 பேர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 22,532 பேர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர். இந்தியாவில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பதில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஜம்மு காஷ்மீர். இங்கு 3,69,191 பேர் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் பஞ்சாப் இருக்கிறது. இங்கு, 3,59,349 பேர் துப்பாக்கி உரிமம் பெற்றிருக்கின்றனர். நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே மத்தியப் பிரதேசம் (2,47,130) மற்றும் ஹரியானா (1,,41,926) மாநிலங்கள் இருக்கின்றன.

மேலும், ராஜஸ்தான் (1,33,968), கர்நாடகா (1,13,631), மகாராஷ்டிரா (84,050), பீகார் (82,585), இமாச்சலப் பிரதேசம் (77,069), உத்தரகான்ட் (64,770), குஜராத் (60,784), மேற்கு வங்காளம் (60,525), டெல்லி (38,754), நாகலாந்து (36,606) போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களின் இருக்கின்றன. மேலும், பல மாநிலங்களில் 15,000-க்கும் அதிகமான உரிமம் பெற்ற துப்பாகிகள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக டாமன் – டையூ, தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி யூனியன் பிரதேசங்களில் 125 பேரிடம் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் உள்ளது. இவையெல்லாம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வ்வளவு பெரிய எண்ணிக்கை இது? வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, மதச்சார்பற்ற நாடு, அமைதிப் பூங்கா என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தியாவில், இவ்வளவு எண்ணிக்கையிலான தனி நபர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளுக்கு அவசியம் என்ன? நமது ஊரில் இருவருக்குள் பிரச்னை வந்தால் தாக்குவதற்குக் கத்தி, உருட்டுக்கட்டை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், வட இந்தியாவில் முதலில் துப்பாக்கியைத்தான் தூக்குவார்கள்.

அப்படிச் சண்டையின்போதோ அல்லது வேறு ஏதோ காரணங்களினாலோ கடந்த 2012-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு இறந்தவர்கள் மட்டும் 3,780-க்கும் மேல். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் தான் 33,69,444. இதில் உரிமம் பெறமால் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வேறு.

2014-ம் ஆண்டு பீகாரின் முங்கேர் பகுதியில் 450 கள்ளத் துப்பாக்கிகளும், அதனை ஒட்டியுள்ள மேற்குவங்கப் பகுதிகளிலிருந்து ஒரே நாளில் 1,500 கள்ளத் துப்பாக்கிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வட இந்தியாவின் பல பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகளைக் குடிசைத் தொழில்களைப் போன்றே இன்றும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக் கலாசாரம் என்பது எந்த ஒரு நாட்டையும் விட்டுவைக்கவில்லை… அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதையே இந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Source: Vikatan

நோபல் வென்ற உயிர்கடிகாரக் கண்டுபிடிப்பு… நம் முன்னோரின் ‘நாள் ஒழுக்க’ தியரிதான்!

அலுவலகத்தில் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருப்போம், திடிரென்று பசிக்கத் தொடங்கும். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தால் வழக்கமாக நாம் தினமும் சாப்பிடும் நேரமாக இருக்கும். “சாப்பிடுற நேரம் எனக்குத் தெரியுதோ இல்லையோ, என் வயிறுக்கு கரெட்டா தெரியுது… சரியா ஒரு மணி ஆனதும் வயித்துல மணி அடிக்க ஆரம்பிச்சுடுது” என்று சிலர் விளையாட்டாகச் சொல்வார்கள். ஆனால், அதில் உண்மை இருக்கிறது. வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ, அதைப்போல நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதுதான் ‘உயிரியல் கடிகாரம்’.

18 -ம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த உயிரியல் கடிகாரம் கண்டறியப்பட்டது. வானியல் அறிஞரான ஜேக்குஸ் டி மாய்ரான், ‘மிமோசா’ (Mimosa Plants) என்னும் தாவரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டபோது இதைக் கண்டறிந்தார். இந்தத் தாவரங்கள் பகலில் சூரியனை நோக்கி இலைகளை விரித்தும், இரவில் கீழ்நோக்கி கவிழ்ந்தும் கொண்டிருப்பதையும் பார்த்து, உயிரியல் கடிகாரம் பற்றிய தியரியை உருவாக்கினார்.

அதன்பிறகு, ஆய்வுகள் சூடுபிடித்தன. மனிதர்களுக்குள்ளும், பிற உயிரினங்களுக்குள்ளும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளை அறிந்துகொள்ளும் விதமாக உயிரியல் கடிகாரங்கள் இருப்பது அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன. தினசரி நிகழும் இந்த மாற்றங்களுக்கு ‘சிர்காடியன் ரிதம்’ (Circadian Rhythm) என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த உயிரியல் கடிகாரம் எப்படி செயல்படுகிறது? அதற்குக் காரணமாக இருப்பது என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து பல முடிவுகளை உருவாக்கியதற்காகத்தான், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

“உயிரியல் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது? நோபல் பரிசு தரும் அளவுக்கு அதில் அப்படியென்ன முக்கியத்துவம் இருக்கிறது?”

மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி தா.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்தா.வி.வெங்கடேஸ்வரன்

“நமக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பசியெடுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் தூக்கம் வரும், குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பு வரும். இது எல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற இயக்கங்கள். ஆனால் வெளியில் தெரியாக பல செயல்பாடுகள் உடலுக்குள் நடைபெறும். உதாரணமாக, ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீரகம் இயங்கவேண்டும் , ரத்தம் எவ்வளவு ஊறவேண்டும், குடலின் உள்சுவரில் உள்ள பொருள்கள் எத்தனை நாளைக்கு ஒருமுறை உதிர்ந்து புதிதாக உருவாக வேண்டும் என்பதை எல்லாம் அந்த உயிரியல் கடிகாரம்தான் தீர்மானிக்கிறது.

மனிதர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா உயிரினங்களுக்கும் அப்படித்தான். உதாரணமாக, ஒரு தாவரம் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூ பூக்கும் என்றால் எக்காலமும் அது மாறாது. 60 வருடம் ஆனது தாவரங்களுக்கு எப்படித் தெரியும். வேறு வேறு இடங்களில் அந்தத் தாவரத்தை நட்டால் கூட அது சரியாகத்தான் பூக்கும்.

மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களும் சரியான கால நீரோட்டத்தில் இயங்கக் காரணமாக இருப்பவை இரண்டு ஜீன்கள். பீரியட் (period). டைம்லெஸ் ஜீன் (Timeless).

முதல் ஜீனை, ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் ஆகிய இருவரும் கூட்டாக கண்டறிந்தனர். இரண்டாவது ஜீனை, மைக்கேல் டபிள்யூ.யங்மாகி கண்டறிந்தார்.

இந்த ஜீன்கள் செய்யும் வேலை என்ன ?

பீரியட் ஜீன் , ஒரு வகையான புரதத்தை உற்பத்தி செய்யும். இது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். செல்லில் இந்தப் புரதத்தின் அளவு குறையக் குறைய, இரண்டாவது ஜீனான டைம்லெஸ் (Timeless). ஜீன் சிதையும். இந்த சிதைவுதான் காலம் நகருவதை செல்களுக்கு உணர்த்தும். இதன் மூலம் தான் நமக்குத் தூக்கம், பசி, போன்ற வெளிப்படையான உடலியல் இயக்கங்களும், உடலுக்குள் ஏற்பட வேண்டிய இயக்கங்களும் சரிவர நடக்கின்றன. இந்தப் புரதம் இரவு நேரத்தில் அதிகமாகச் சுரப்பதையும், பகலில் அதன் அளவு குறைவதையும் மேற்கண்ட மூவரும் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ‘சிர்காடியன் ரித’த்தைப் பொருத்து புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதையும் நிரூபித்துள்ளனர்.

ஃப்ரூட் ஃப்ளைஸ் (Fruit Flies) என்னும், பழங்களை மொய்க்கும் ஒரு வகை ஈக்களில் இருந்து இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்து சாதித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிக்கும் பிறகு நடைபெற்றுவரும் ஒரு முக்கியமான விவாதம், மனிதர்களில் உள்ள வேறுபாட்டைப் பற்றியது. மனிதர்களில் பகலில் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் இருப்பார்கள். இவர்கள் காலை நேரத்தில் சிறப்பாக வேலை செய்வார்கள். படிப்பார்கள், எழுதுவார்கள். ஆனால் சிலர் இரவு நேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். படிப்பார்கள். எழுதுவார்கள்.

இரவு நேரத்தில் இயங்கவே முடியாத ஒருவர் நைட் ஷிப்ட்டில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பார். அவரால் வேலையை ஒழுங்காகச் செய்யமுடியாது. அது மட்டுமில்லாமல் பல்வேறு உடல் உபாதைகளும் அவருக்கு உண்டாகும்.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் தனித்தன்மைகளைக் கண்டறிந்து விட்டால் அனைவரும் காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்யவேண்டும் என்கிற நிலை மாறும். ஐரோப்பாவில் பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் 8 மணி நேரம் வேலை செய்யவேண்டும். ஆனால் அது எந்த நேரம் என்பதை ஊழியர்களே தீர்மானம் செய்து கொள்ளலாம். அதைப்போன்ற முறை இங்கே இல்லை.

எதிர்காலத்தில் அறிவியல் ரீதியாக ஒரு மனிதத் தன்மையுடன் ஒரு சமூகத்தைப் படைக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்… ” என்கிறார் தா.வி. வெங்கடேஸ்வரன்.

உயிரியல் கடிகாரம் பாதிக்கப்பட்டால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் உண்டாகும்?

மருத்துவர் சிவராமக்கண்ணன்பொதுநல மருத்துவர் சிவராமக்கண்ணனிடம் கேட்டோம்

“உயிரியல் கடிகாரத்துக்கு மாறாக நாம் செயல்படும்போது டயாபட்டீஸ், ரத்த அழுத்த நோய், இதயநோய்கள், ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, ஒரு நாளில் காலை 9 மணி முதல் 2 மணி வரைதான் நாம் சிறப்பாக இயங்க முடியும் அதற்குப் பிறகு ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இரவு நேரம் நெருங்கியதும் மெலட்டனின் சுரந்து நமக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால் அந்த நேரத்தில் வலுக்கட்டாயமாக வேலை செய்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

இதற்கெல்லாம் காரணம் உயிரியல் கடிகாரத்தை செயல்படுத்த உதவும் ஒரு வகையான புரதம் தான். இந்த புரதம் அதிகமாக இருக்கும்பொழுது நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். குறையும்போது செயல்பட முடியாது. இந்த புரதத்தைக் கண்டறிந்ததற்காகத்தான் தற்போது நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்பட இருக்கின்றன. எப்படி தூக்கம் வருவதற்கு மெலட்டனின் மாத்திரைகள் உதவுகிறதோ, அதேபோல் இந்த புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய மருந்துகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் மருத்துவர் சிவராமக்கண்ணன்.

“உயிரியல் கடிகாரம் பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கிறது?”

சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.சித்த மருத்துவர் வேலாயுதம்

“சிர்காடியன் ரிதம், சித்த மருத்துவத்தில் ‘நாள் ஒழுக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்’ என்பதே சித்த மருத்துவத்தின் கான்செப்ட். வெளியில் உள்ள பஞ்சபூதமும், உடலில் உள்ள பஞ்சபூதமும் சேர்ந்துதான் உடலை இயக்குகின்றன. காலை 4.30 முதல் 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும் என்பதே முதல் ஒழுக்கம். காலை எழுந்ததும் நல்ல காற்றுக்காக நுரையீரல் ஏங்கும். நல்ல காற்றானது 4.30 முதல் 6 மணி வரை தான் இருக்கும். இதுதான், ‘பிரம்ம முகூர்த்தம்’ என்கிறோம். அதனால்தான் காலை விடியற்காலையில் எழவேண்டும் என்கிறோம்.

இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். எட்டு மணிக்குள் உறங்கிவிட வேண்டும். இது போன்ற பழக்கவழக்கங்களை வாழ்வியல் முறைகளோடு பிணைத்துத் தந்துள்ளனர் நம் முன்னோர்கள். நாம் பகுத்து ஆராய்ந்து தீர்த்த இயற்கையை நவீன ஆராய்ச்சி மூலம் இப்போது கண்டுபிடித்துள்ளனர். முன்னோர்கள் சொன்னார்கள் என்றால் யாரும் கேட்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் சொன்னால்தான் கேட்பார்கள். எப்படியாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி…” என்கிறார் வேலாயுதம்.

உயிர்க்கடிகாரம் பற்றிய ஆராய்ச்சி நம் மதுரையில் மேற்கொள்ளப்பட்டது. அதுகுறித்து விவரிக்கிறார், ‘கைக்கடிகாரமும், உயிர்க்கடிகாரமும்’ என்ற புத்தகத்தை எழுதிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பொன்னையா ராஜமாணிக்கம்.

பொன்னையா ராஜமாணிக்கம்“உயிர் கடிகாரம் குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சோதனை செய்யப்பட்டது. பிக்பாஸ் மாதிரி, இது ‘பங்கர் ஸ்டடி’. பூமிக்கடியில் குழி தோண்டி அதற்குள் மூன்று விஞ்ஞானிகள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு பகல், இரவு என்று எதுவும் தெரியாது. அவர்களின் தூக்கம், வேலைநேரம் ,ஒய்வு நேரம் இதெல்லாம் கணக்கிடப்பட்டது . அதேபோல் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமாக ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆய்வில் ‘ உயிர்க்கடிகாரம்’ மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமான புரதம்தான் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

உயிர் அணுக்களும் ஒருவித கடிகாரச் சுழற்சியில்தான் இயங்குகின்றன. ஆஸ்துமா நோயாளிகளுக்கு காலை நேரத்தில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் எல்லாம் காலைநேரத்தில் வேலை செய்யக்கூடியவையாக இருக்கும்.

அதேபோல், நம் வீட்டில் மாலை நேரத்தில் சவரம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் மாலை நேரத்தில் ரத்தம் உறைவது தாமதமாகும் என்பதற்காகத்தான்… ” என்கிறார் ராஜமாணிக்கம்.

ஆக, நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பென்பது, நம் முன்னோர் முன்பே கண்டறிந்த ஒரு தத்துவத்தின் சிறு பொறிதான். நம் முன்னோரின் சித்தாந்தங்களை, கண்டுபிடிப்புகளை, தத்துவங்களை, மருத்துவத்தை எல்லாம் தொகுத்து, மொழி மாற்றி உலகின் பார்வைக்குக் கொண்டு சென்றால்..? நோபல் என்ன… உலகில் இருக்கும் அத்தனை விருதுகளும் நமக்குத்தான்!

Source: Vikatan

9 மாதத்தில் 750 கி.மீ தூரம் பயணித்த ‘உம்கா’..! – கரடி இனத்தின் “பியர் கிரில்ஸ்”

அந்த நதிக்கரையோரம் ஏதோ ஒரு புது உயிரினத்தின் நடமாட்டம் இருப்பதை அந்தத் தொழிற்சாலையில் இருப்பவர்கள் உணர்கிறார்கள். அவ்வப்போது நாய்கள் குரைத்தபடி அங்குமிங்கும் ஓடுகின்றன. பயத்தால் குரைப்பது போல் இல்லை அந்த நாய்கள் குரைப்பது. தெருவில் சுற்றும் நாய்களும் கூட கடந்த சில நாட்களாக அதிகம் தெருக்களில் நடமாடுவது கிடையாது. எல்லா நாய்களும் ஒன்றுகூடி அந்த நதிக்கரையின் மறைவான பகுதிக்கு ஓடிப்போகின்றன. நாய்கள் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றித் திரிகின்றன. இது அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

அப்படி அந்த கொலிமா (Kolyma) நதிக்கரையோரம் என்னதான் இருக்கிறது என்று பார்க்க சிலர் நாய்களைப் பின்தொடர்ந்துப் போகிறார்கள். அவர்கள் வேலை செய்வது ஒரு மீன் தொழிற்சாலை. ரஷ்யாவின் யகுட்ஸ்க் (Yakutsk) பகுதி அது. கரையோரம் ஓடிய நாய்கள் ஒரு இடத்தில் நின்றன. சில நொடிகளில் அந்தப் பக்கமிருந்த புதரிலிருந்து அந்த விலங்கு வெளி வந்தது. வெள்ளை வெளேரென்று இருந்தது அது. தூரத்தில் நின்று கொண்டிருந்த இவர்களுக்கு அது என்னவென்று தெரியவில்லை. கொஞ்சம் நெருங்கிப் போகிறார்கள்.

அது ஓர் அழகான பனிக் கரடி குட்டி. இவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். அந்தப் பனிக்கரடி நாய்களோடு விளையாடத் தொடங்கியது. இவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசியபடி அங்கிருந்து வெளியேறினார்கள். நேராக தொழிற்சாலைக்கு சென்று, அங்கிருந்து கொஞ்சம் மீன்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அந்தக் கரையோரப் பகுதிக்கு வந்தார்கள். அந்தப் பனிக்கரடி நாய்களோடு விளையாடியபடி இருந்தது. இவர்கள் அதை நெருங்கினார்கள். கொஞ்சம் மெதுவாக அடி மேல் அடி வைத்து தான் நடந்தார்கள். தங்களைக் கண்டு அந்தக் குட்டி கரடி பயந்து ஓடிவிடுமோ என்று நினைத்தார்கள். ஆனால், அந்தப் பனிக்கரடி இவர்களைப் பார்த்ததும், எதுவும் செய்யவில்லை. இவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கூடையிலிருந்து மீன்களை எடுத்துப் போட்டனர். தீவிர பசியில் இருந்த பனிக்கரடி உடனடியாக போட்ட அத்தனை மீன்களையும் தின்று தீர்த்தது.

இந்தத் தகவல் அந்தப் பகுதி முழுக்க பரவுகிறது. உயிரியல் பூங்காவைச் சேர்ந்தவர்களும், கால்நடை மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அங்கு வந்து சேர்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் பனிக்கரடியை, அந்தப் பகுதியில் பார்ப்பது பெரும் ஆச்சர்யம். காரணம், அது பனிக்கரடிகள் வாழும் பகுதி கிடையாது. அங்கிருந்து தோராயமாக 750கிமீ தூரத்தில் இருக்கும் ஆர்க்டிக் பனி பிரதேசத்தில்தான் இந்தப் பனிக்கரடிகள் இருக்கும். இது எப்படி இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கும் என்ற கேள்விக்கு விடை தேட தொடங்கினார்கள். அதன் பயண வழி குறித்து பல விஷயங்களை ஆராய்ந்தனர்.

தூரத்திலிருந்து அதைப் பார்த்தபோது, கால்நடை மருத்துவர்களுக்கு அதற்கு 2 வயது இருக்கும் என்று கணித்தனர். ஆனால், அதை மயக்க ஊசி போட்டு பிடித்து மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, அதற்கு வயது 9 மாதங்கள்தான் என்பதை உறுதி செய்தனர்.

பனிக் கரடி - உம்கா

அது தன்னந்தனியாக எப்படி அவ்வளவு தூரம் வந்தது? அதுவும் அது கடந்து வரும் காட்டுப் பாதையில் “பிரவுன் பேர்” (Brown Bear) எனப்படும் கரடிகள் அதிகமிருக்கும். அதுவும் இது அந்தக் கரடிகள் நீண்ட உறக்கத்திற்குப் (Hybernation) போகும் காலம். இந்த சமயத்தில் பனிக் கரடி தங்கள் வாழ்விடத்திற்கு வருகிறது என்றால் அவை நிச்சயம் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கும். அதிலிருந்து எல்லாம் இது எப்படி தப்பித்திருக்கும்?

ஒரு வேளை வேட்டைக்காரர்கள் இதன் தாயைக் கொன்று இதைக் கடத்தி வரும்போது, பாதி வழியில் இது தப்பித்திருக்குமோ என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், உறுதியாக இது எப்படி இங்கு வந்தது என்பது தெரியவில்லை. இப்பொழுது அந்தப் பகுதியிலிருக்கும் “ஓர்டோ டொய்டூ மிருகக்காட்சி சாலை”யில் (Orto Doidu Zoo) அது வைக்கப்படிருக்கிறது. நாய்களோடு நன்றாக பழகுவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களிடத்திலும் பாசமாக இது நடந்துக் கொள்கிறது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் “உம்கா” (Umka) என்று செல்லப் பெயரிட்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் பிரபலமான ஒரு கார்ட்டூனில் வரும் பனிக்கரடியின் பெயர் இது.

பனிக் கரடி

ஒருவேளை ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து அத்தனை தூரமும், அத்தனை ஆபத்துகளையும் கடந்து உம்கா வந்திருந்தால், உம்காதான் இன்றைய உலகின் ஆகச் சிறந்த ஊர்சுற்றியாக இருக்க முடியும். பனிக்கரடி இனத்தில் உம்கா ஒரு “பியர் கிரில்ஸ்” (Bear Grylls) என்று செல்லமாக பாராட்டுகிறார்கள் ரஷ்யவாசிகள்.

Source: Vikatan