ஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்!

சிறுவயதில் அச்சிறுவனுக்குச் சரித்திர, புராணக் கதைகளைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். ‘அமர் சித்ர’ கதைகளை மீண்டும் மீண்டும் படித்து, தன்னுடைய கற்பனை வளத்துக்குத் தீனிபோட்டுக்கொண்டான். தன்னைச் சுற்றி இருப்பவர்களிடையே தனது கதைகளை (கனவுலகத்தை) சொல்லி, அவர்களை வியப்புக்குள்ளாக்குவதில் வல்லவன் ஆனான். பின்னாளில் அச்சிறுவனின் மகிழ்மதி பேரரசில், நாம் அனைவரும் மக்களாக மாறியதில் வியப்பொன்றுமில்லை!

ராஜமெளலி

1965ல் அக்டோபர் 10ஆம் நாள் கர்நாடகத்தில் பிறந்தார் ராஜமௌலி. பிறந்தது கர்நாடகா என்றாலும், வளர்ந்தது எல்லாம் ஆந்திராவில்தான். தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான ‘விஜயேந்திர பிரசாத்’ தான் இவரது தந்தை. சிறுவயதில் இருந்தே தன் தந்தையிடம் பல கதைகளைக் கேட்டு வளர்ந்த ராஜமௌலி, தனது இளம்பருவத்தில் கேமராமேன் வெங்கடேஸ்வர ராவிடம் உதவியாளராகவும், ஏவிஎம் ஸ்டுடியோவில் ரெகார்ட்டிங் பிரிவிலும் பணியாற்றினார்.

தன் தந்தை பிற இயக்குநர்களுக்குச் சொன்ன கதைகள், திரைப்படத்தில் முழுமையாக வருவதில்லை என்ற வருத்தம் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. தன்னால் அந்த இயக்குநர்களைவிட சிறப்பாக அந்தக் கதையைத் திரையில் காட்ட முடியும் என்று முழுதாக நம்பினார், அதில் வெற்றியும் பெற்றார்.

பழம்பெரும் இயக்குநரான கே.ராகவேந்திரா ராவின் கடைசி உதவியாளராகச் சேர்ந்தார் ராஜமௌலி. அவர் தயாரித்து வந்த ‘சாந்தி நிவாசம்’ என்ற சீரியலின் பல எபிசோட்களையும், தெலுங்கு தேச கட்சியின் விளம்பரப் படங்களையும் இயக்கினார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 17-ல் இருந்து 18 மணிநேரம் வரை உழைத்தார்.

ராஜமெளலி

கதை, திரைக்கதை எழுதி ராகவேந்திரா ராவ் தயாரிக்கவிருந்த படத்திற்கு ஜூனியர் என்டிஆர் நடிக்க ஒப்பந்தமானார். தனது முதல் அசிஸ்டென்ட்ஒருவருக்கு வாய்ப்பை அளித்தார், ராகவேந்திரா ராவ். ஆனால், அந்த உதவியாளர் வேறொரு சீரியலை இயக்கிக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பு கேட்காமலேயே ராஜமௌலிக்கு வந்தது. இவ்வாறு இயக்கிய முதல் படமான ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ மெகா ஹிட். ஜூனியர் என்டிஆரின் முதல் படமான ‘Ninnu Chudalani’ யின் தோல்விக்கு, மிகப்பெரிய ஆறுதல் அளித்தது.

என்னதான் படம் ஹிட்டுனாலும் பெருமை, அங்கீகாரம் எல்லாமே தன்னுடைய குருவான ராகவேந்திரா ராவிற்கே கிடைத்தது. அப்போதைய தெலுங்கு திரையுலகம் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இல்லை, தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. ராஜமௌலிக்கு இது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டாவது படத்தில் தனது முத்திரையை வலுவாகவே பதிக்க வேண்டும் என்று எண்ணினார் ராஜமௌலி.

தான் யார் என்பதை நிரூபிக்க கிட்டதட்ட 2 வருட காலம் தயாரிப்பாளர்களைத் தேடிக்கொண்டே இருந்தார். அப்பொழுது, vmc என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்க, ராஜமௌலி சொன்ன கதையும் அவர்களுக்குப் பிடித்ததால், ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படமே ‘சிம்ஹாத்ரி’. இதுவும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கு திரையுலகத்திற்கு அப்பொழுதுதான் தெரிந்தது ‘ராஜமௌலி’ யார் என்று.

ராஜமெளலி

அடுத்தடுத்து வந்த ஷை(2004), சத்ரபதி(2005), விக்ரமாகுடு(2006), எமதொங்கா(2007), மகதீரா(2009), மரியாதை ராமண்ணா(2010), ஈகா(2012), பாகுபலி I & II (2015,2017) என ஒவ்வொன்றும் சொல்லி அடித்த கில்லியாக… அனைத்துப் படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி, தொடர்ந்து 10 வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றார். ஆந்திராவில் ‘ஜக்கண்ணா’ என்று ரசிகர்களாலும், நடிகர்க ளாலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

ராஜமௌலியைப் பற்றி சொல்லும்போது, அவரது திரைக்கதையைப் பற்றியும் கூறவேண்டும். தன் தந்தை கூறும் ஒன்-லைன்களுக்கு அருமையான திரைக்கதை எழுதி அசத்திவிடுவார். ‘சிம்ஹாத்ரி’ முதல் ‘பாகுபலி’ வரை என அனைத்தும் இவரது தந்தை கூறிய ஒன்-லைன்களே.

எப்பொழுதும் தனது திரைக்கதையை மட்டுமே நம்புபவர். படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு, மொத்தத் திரைக்கதையையும் சீன் பை சீன், ஷாட் பை ஷாட், கேமரா ஆங்கிள், ஸ்டோரிபோர்டு என எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கிளம்புவதுதான் ராஜமௌலியின் வழக்கம்.

ராஜமெளலி

ஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் இரவு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்து, மேருக்கேற்றிவிட்டு பின்னர்தான் படப்பிடிப்பில் நடித்துக் காட்டுவார். நடிகர்களிடம், தான் நடித்துக் காட்டிவிட்டு, பின்னர், அவர்களிடமிருந்து அவர்கள் பாணியில் இயல்பான நடிப்பைப் பெறுவதுதான் ராஜமௌலியின் ஸ்டைல்.

இவரது ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் கல்லூரி வாழ்க்கையையும், சிம்ஹாத்ரியில் ஆக்ஷனையும், ஷையில் ரக்பி விளையாட்டையும், சத்ரபதியில் அகதி ஒருவன் டான் ஆவதையும், விக்ரமாகுடுவில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிபற்றியும் (இது ‘சிறுத்தை’யாக தமிழில் ரீமேக் ஆனது), எமதொங்காவில் எமலோக அட்டகாசங்களையும் (ரஜினி நடித்த ‘அதிசயப் பிறவி’யின் இன்ஸ்பிரேஷன்), மகதீராவில் ராம்சரணுக்கும், காஜலுக்கும் இடையே உள்ள பூர்வஜென்ம உறவையும், மரியாதை ராமண்ணாவில் பூர்விக சொத்தை விற்க செல்லும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்னையையும் (சந்தானம் நடித்து தமிழில் வெளிவந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்), ஈகாவில் ஈயின் காதலையும், பாகுபலியில் அரச வம்சத்தின் வன்மத்தையும் எனத் தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதையையும், வெவ்வேறு களங்களைச் சார்ந்து அமைத்து வித்தியாசத்தைக் காண்பித்தார் ராஜமௌலி.

இவரது படங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால்,’பழிவாங்கலே’ முதன்மையாகக் காணப்படும். இவரது படங்களில் காணப்படும் வில்லன்கள் அனைவரும் படுபயங்கரமாகவே காணப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால்,’ஹீரோவின் பலத்தை காட்டவே’ இவ்வாறு செய்கிறேன் என்றார். புதுமையான ஆயுதங்களையும், சண்டைக்காட்சிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுவருவதிலும் வல்லவர். மாவீரனில் (மகதீரா) ராம்சரண் 100 வீரர்களை அடிக்கும் காட்சியே இதற்கு போதுமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.

பாகுபலியைப் பார்த்து இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல, உலகமே வியந்தது. பாகுபலியின் வெற்றி இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களின் பட்டியலில் ராஜமௌலியைச் சேர்த்தது. இந்தியாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையும் பெற்றது.

இசையமைப்பாளர் கீரவாணி, படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், கேமராமேன் செந்தில், ஆடை வடிவமைப்பாளர் ராமா ராஜமௌலி, சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன் என அனைவரும் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை, ராஜமௌலி உடன் ஒரே டீமாக வேலை செய்கிறார்கள்.

தன் படங்கள் தோற்றுவிடுமோ என்ற பயம் இவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. தனது முந்தைய படத்தை விட இந்தப்படம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவரிடத்தில் இருக்கிறது.

தொடர் வெற்றிகள் அனைத்தையும் தலைக்கேற்றாமல், பயத்துடன் பணியாற்றும் பாங்குதான், அவரது வெற்றி ரகசியம். சினிமாவிற்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும் இந்த ரகசியம் பொருந்தும். உங்களோட ‘மஹாபாரதம்’ படத்துக்காக வி ஆர் வெயிட்டிங்… ஜெய் மகிழ்மதி!

Source: Vikatan

“அரசியல்வாதிகள் தூங்குற மாதிரி நடிக்கிறாங்க; அவங்களை எழுப்ப சிரமமாத்தான் இருக்கும்!” – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

`இறைவி’க்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் `மெர்க்குரி’. வசனமே இல்லாத த்ரில்லர் திரைப்படம். “பிரபுதேவா சாரைத் தவிர, சனந்த், தீபக், அனீஷ், ஷஷாங் எல்லோருமே வளரும் நடிகர்கள். எங்களோட `ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிச்சிருக்கிற `மேயாத மான்’ல நடிச்சிருக்கிற இந்துஜா, இதுல முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்காங்க.

எங்க அப்பா நடிச்சிருக்கார். இப்படி படம் முழுக்க மொத்தமே ஆறேழு கேரக்டர்கள் மட்டும்தான். கொஞ்சம் சவால்தான். முயற்சி பண்ணிப் பார்த்திருக்கோம், வொர்க் அவுட் ஆகுதான்னு ஆடியன்ஸ் பார்க்கும்போதுதான் தெரியும்” – வழக்கமானவற்றிலிருந்து விலகி நிற்பதுதான் கார்த்திக் சுப்புராஜின் ன் சிறப்பு. எளிமையான வார்த்தைகளில் தன் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து சொல்கிறார்.

“ `ஐ.டி-யில வொர்க் பண்ணினவர், எளிதா சினிமாவுக்கு வந்துட்டார்’னு சொன்னாலும் அதுக்குப்பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கும்ல… அது எப்படியானது?”

“கஷ்டத்தோட லெவல், சூழல் மாறுபடலாம்; ஆனா கஷ்டம் எல்லோருக்கும் ஒண்ணுதான். பிளாட்பாரத்துல படுத்து வளர்ந்தவங்க மட்டும்தான் கஷ்டப்பட்டு வர்றாங்கனு சொல்ல முடியாது. என்னைப் பார்த்து `ஐ.டி-யில வேலைபார்த்த பையனுக்கு என்ன கஷ்டம் இருந்துடப்போகுது?’னு பேசினாலும், அவங்களுக்குப் பதில் சொல்லாம கடந்து வந்திடுவேன். எல்லோரும் அப்போ குறும்படத்தை சாதாரணமா பார்த்தாங்க. சினிமா எடுக்கிறதுக்குக் கொஞ்சமும் குறைஞ்சதில்லை குறும்படங்கள்.

நான் இயக்கின `நீர்’ குறும்படத்துக்குப் பணம் திரட்ட நானும் என் அப்பாவும் எப்படி அலைஞ்சோம், `நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில ஜெயிச்ச பிறகும் தயாரிப்பாளர் கிடைக்க ஒன்றரை வருஷம் ஆச்சு. செலவே இல்லாம ஒரு குறும்படம், ஆயிரம் ரூபாயில ஒரு குறும்படம், லட்சம் ரூபாய்க்கும் குறும்படம்… இப்படி சேர்த்துவெச்ச காசை எல்லாம் குறும்படத்துக்காகத்தான் செலவுபண்ணேன். சினிமாவுக்கு முன்னாடி 14 குறும்படங்கள் எடுத்திருக்கேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கு. ஆனா, பயணப்பட்டுக்கிட்டே இருக்கோம். சிலபேர் பஸ்ஸுல வர்றாங்க, நான் ட்ரெயின்ல போறேன். ஆனா, எல்லோரும் போய்ச்சேரணும்னு நினைக்கிற இடம் ஒண்ணுதான்.”

“ `ஸ்டோன் பெஞ்ச்’ வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது?”

“இந்த கம்பெனியை ஆரம்பிச்சதே குறும்படங்களுக்கும் ஒரு சந்தையை உருவாக்கணும்னுதான். ஏன்னா, ரசிகர்கள் யாரும் குறும்படம் பார்க்காம இல்லை. அப்படி இலவசமா பார்க்கிற ரசிகர்களுக்கு, தரமான குறும்படங்களைப் பணம் கொடுத்துப் பார்க்கவைக்கிற முயற்சி இது.

சிரமமான காரியம்தான். நல்ல திரைப்படங்களை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கிறதுல இருக்கிற பிரச்னை, குறும்படங்களுக்கும் இருக்கு. அதைக் களையுறதுக்கான வாய்ப்புகள் இப்போ அதிகரிச்சிருக்கு. அமேஸான், நெட்ஃபிலிக்ஸ் மாதிரியான தளங்களில் நம்ம படைப்புகளை ரிலீஸ் பண்ணலாம். நாங்ககூட ‘கள்ளச்சிரிப்பு’ங்கிற வெப் சீரிஸ் பண்ணினோம். அதுக்கு வரவேற்பு நல்லா இருக்கு. தொடர்ந்து தரமான படங்களைத் தயாரிச்சு ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். அதுக்கான முதல் முயற்சிதான் `மேயாத மான்’.”

`தமிழ் சினிமாவின் பேய்ப்பட சீஸனை `பீட்சா’வுக்கு முன் – `பீட்சா’வுக்குப் பின்னு பிரிச்சுடலாம். நீங்க ஆரம்பிச்சுவெச்ச பேய்ப்பட ட்ரெண்ட் இன்னும் ஓயலை…”

“ `பீட்சா’வுக்குப் பிறகு நிறைய பேய்ப் படங்கள் வந்தது உண்மைதான். ஆனா, அதுல பயமுறுத்தின பேய்களைவிட சிரிக்கவெச்ச காமெடிப் பேய்கள்தான் அதிகம். அந்த காமெடி ஹாரர்ல சில படங்கள் எனக்குப் பிடிச்சிருந்தது. லோ பட்ஜெட்ல ஒரு ஹாரர் படம் பண்ணா, அது ஆடியன்ஸுக்கும் திருப்தியா இருக்கும், தயாரிப்பாளரும் தப்பிச்சுக்கலாம்னு ஒரு ஐடியா `பீட்சா’ மூலமா கிடைச்சது. ஆனா, அதைக் கொஞ்சம் அதிகமாத்தான் கொடுத்துட்டாங்கனு தோணுது!”

“விவசாயிகள் பிரச்னைக்கு ட்வீட் பண்ணீங்க, அனிதாவுக்கான நிகழ்வுகளில் கலந்துக்கிட்டீங்க. தற்போதைய அரசியல் சூழல் உங்களை எந்த அளவுக்குப் பாதிக்குது?”

“ `சமீபகாலமா நாம பதற்றமான ஒரு சூழல்ல இருக்கோம்’ – இது நான் மட்டுமல்ல, என்னைச் சுற்றி இருக்கிற எல்லோருமே சொல்றது. எனக்கு என்ன கோபம்னா, போராட்டமெல்லாம், இப்போ தினசரி வேலைக்குப் போயிட்டு வர்ற மாதிரி ஆகிடுச்சு. டெல்லியில விவசாயிகள் போராடுறாங்க, படிப்புக்காக மாணவர்கள் போராடுறாங்க, டாஸ்மாக்கை அகற்றணும்னு பெண்கள் போராடுறாங்க.

எத்தனை பிரச்னைகள், எத்தனை போராட்டங்கள்! எல்லாமே அரசியல்வாதிகளுக்குத் தெரியுது; அதுல இருக்கிற நியாய, அநியாயங்கள் புரியுது. ஆனா, கண்டுக்க மாட்டேங்கிறாங்க. இதோ, இப்போ அனிதாவைக் கொன்னுட்டாங்க. என்னோட பொருள் உங்ககிட்ட இருக்குன்னா நான் கேட்டு வாங்கிக்குவேன்; அடிச்சுப் பிடுங்கி எப்படியோ வாங்கிடுவேன். ஆனா, அனிதா கோர்ட் வாசல் வரை போனாங்க. அதுவரை நம்பிக்கை கொடுத்த அரசு, திடீர்னு `அதெல்லாம் கிடையாது போ’னு அனுப்பிவெச்சுடுது. தனக்குத் தேவையானதை யார் பறிச்சுக்கிறாங்கனு தெரியாத சூழல்லேயே இறந்துபோயிட்டாங்க.

கார்த்திக் சுப்பராஜ்

பல இடங்கள்ல, இந்த மரணத்தை சாதிரீதியாவும் பார்க்கிறாங்க. நிச்சயமா அதையும் தவிர்க்க முடியாது. காலம் காலமா பணம் இல்லாதவங்க, இங்கே வாழ்றதே கஷ்டமான காரியமாத்தான் இருக்கு. எந்தச் சாதியா இருந்தாலும், மதமா இருந்தாலும் பணக்காரனா இருந்தா இங்கே பிரச்னையே இல்லை. ஏழையா இருக்கும்போதுதான் எல்லாம் ஒண்ணு சேரும்.

முக்கியமா, இந்தியா முழுக்க மதரீதியான ஒரு அழுத்தம் இருக்கிறதையும் உணர முடியுது. எலெக்‌ஷன், வாக்குரிமை… இதெல்லாம் எவ்ளோ பெரிய ஆயுதங்கள்! நாம சரியா பயன்படுத்தாம விட்டுட்டோமேனு எல்லோரும் ஃபீல் பண்றாங்க. எதிர்காலத்துல அதைச் சரியா பயன்படுத்துவாங்கனு நம்புறேன். அரசியல்வாதிகள் தூங்குற மாதிரி நடிக்கிறாங்க. அதனாலதான் மக்கள் அவங்களை எழுப்ப சிரமப்படுறாங்க. பரவாயில்லை… தூங்குறவங்க ஒருநாள் எழுந்துதானே தீரணும். இல்லைன்னா வாழ முடியாது!”

“ரஜினி, கமல், விஜய், விஷால்னு சினிமா டு அரசியல் என்ட்ரி கொடுக்கப்போற நடிகர்களோட பட்டியல் நீண்டுக்கிட்டேபோகுதே?”

“நம்ம ஊர்ல பல அரசியல்வாதிகள் சினிமாவுல இருந்துதான் வந்திருக்காங்க. இனி வரப்போறவங்க ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ங்கிற பாடத்தைப் படிச்சவங்க, அதை உள்வாங்கிட்டவங்களா இருந்தா நல்லா இருக்கும். அதனால, இவங்க வந்தா எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனா, கவர்ச்சி, கற்பனைகளுக்கு மயங்கி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தா, நிச்சயமா இப்போ படுற கஷ்டங்களையெல்லாம் அப்பவும் படவேண்டியதிருக்கும். அதனால, அரசியலுக்கு வரத் தகுதி இருக்குனு நினைக்கிற சினிமா பிரபலங்கள் தாராளமா அரசியலுக்கு வாங்க. அவங்களை ஏத்துக்கிறதா, நிராகரிக்கிறதானு மக்கள் முடிவுபண்ணட்டும்!”

“சமீபத்துல நடந்த தயாரிப்பாளர்கள் – திரைப்படத் தொழிலாளர்கள் பிரச்னையை நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க?”

“சினிமா தொழிலாளர்கள் சங்கம் பாரம்பர்யமான யூனியன். அதை மொத்தமா ஒதுக்கிறது தவறு. சேர்ந்துதான் வேலைபார்க்கணும். ஆனா, சில விதிகள் தளர்த்தப்படணும். ஏன்னா, எல்லா படங்களுக்கும் டெக்னீஷியன்ஸ் ரொம்ப முக்கியம். ஒரு காட்சிக்கு எந்த இடத்துல லைட் கட்டணும், செட் பண்ணணும்னு அவங்களுக்குத்தான் கச்சிதமா தெரியும். புதுசா வர்றவங்களை வெச்சு வேலை வாங்கிடலாம்.

ஆனா, ஷூட்டிங் தாமதம் ஆகும். ஒரு மணி நேரம் ஷூட்டிங் தாமதமானா, தயாரிப்பாளருக்கு எவ்ளோ நஷ்டம் வரும்னு சினிமாவுல இருக்கிறவங்களுக்குத் தெரியும். அதே சமயம், படைப்பாளிகளோட தேவைக்கேற்ற தொழிலாளர்கள் ஸ்பாட்ல இருந்தா போதும்.

உதாரணத்துக்கு, ஒரு சின்ன ரூம்ல நான் ஒரு காட்சியை எடுக்கிறேன்னா, அதிகபட்சம் மூணு லேபர் போதும். ஆனா, அதிகமா பயன்படுத்தணும்கிற கட்டாயம் வருது. அதை மாத்தினா சினிமா ஆரோக்கியமா இருக்கும். பல படைப்பாளிகள் வெளியே வருவாங்க. தயாரிப்பாளரோட பட்ஜெட் குறையும். ஃபெப்சி அமைப்பு அந்தப் பிரச்னைகளையெல்லாம் சரி பண்றதா சொல்லிட்டாங்க, மகிழ்ச்சி!”

கார்த்திக் சுப்பராஜ்

உங்களோட சில குறும்படங்கள் அரசியல் சம்பந்தப்பட்டவை. ஆனா, இதுவரை நீங்க இயக்கிய படங்களில் அப்படியான களம் இல்லையே?”

எதிர்காலத்துல சமூகம், அரசியல் சார்ந்த படங்கள் நிச்சயமா பண்ணுவேன். ஒரு விஷயத்தை நாம சொல்லும்போது, மேம்போக்கா சொல்லி உணர்வுகளைத் தூண்டிவிட்டு கைதட்டலும் வசூலும் வாங்கிட்டுப் போயிடக் கூடாது. ஒருத்தனுக்கு ஒரு விஷயம் தெரியலைன்னா, அந்த விஷயத்துக்கான விழிப்புஉணர்வை அந்தப் படம் கொடுக்கணும்.

நான் ஹிட்லரோட கொடுமைகளை எல்லாம் உலக சினிமாவுல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தத் தாக்கம் இன்னும் எனக்குள்ள இருக்கு. இப்போ நான் ஈழத்தமிழர்களோட கதையைச் சொல்லணும்னாலும், அப்படி ஒரு தாக்கத்தோடுதான் பதிவுபண்ணணும். தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியலைன்னாலும், வெவ்வேறு வழிகளில் மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிற சூழல் வரணும்… அப்படி ஒரு சூழல் வரும்போது, நிறைய போல்டான அட்டெம்ட்ல இறங்குவேன்!”

Source: Vikatan