பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ – சுஜா சர்ப்ரைஸ்

பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். ‘பிக் பாஸ்’ வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா.

ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ”ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று நிகழ்ச்சியின்போதே தெளிவுபடுத்தினார். ‘பிக் பாஸ்’ வீட்டில் தனது தந்தையை எண்ணி வருந்தியவருக்கு, கமல்ஹாசன் தந்தை ஸ்தானத்தில் இருப்பதாகக் கூறினார். 100 நாள்கள் முடியாமல் தன் வருங்கால கணவரைச் சந்திக்கப்போவதில்லை என அப்போது தெரிவித்திருந்தார் சுஜா. ‘என் திருமணத்துக்கு வாங்க’ எனக் கமலிடம் வேண்டுகோள் விடுக்க, கமல் ‘ஓ.கே” சொன்னதும் நெகிழ்ந்தார். அதுகுறித்தெல்லாம் பேச நமது அலுவலகத்துக்கு அழைத்திருந்தோம்.

அலுவலகத்துக்குள் நுழையும்போதே அனைவரிடமும் நலம் விசாரித்தார் சுஜா. வீடியோ நேர்காணல் என்றதும், ” ‘பிக் பாஸ்’ மாதிரி கட் பண்ணாமல், நான் என்ன பேசறேனோ அதை மக்களுக்கு காட்டுங்க’ என ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தார். அவருடன் தொடர்ந்து பேசினோம்…

”சுஜா வீட்டில் எப்படி?”

”வீட்டுல எல்லாரையும் மாதிரிதான். காலையில் எழுந்து கோலம் போட்டுட்டு, சமையல் செய்துட்டு, அம்மா மற்றும் தங்கச்சியோடு ஜாலியா பேசிட்டு, எனக்காகக் கொஞ்ச நேரம் செலவுப் பண்ணுவேன். ‘பிக் பாஸ்’ல என்னை எப்படிப் பார்த்தீங்களோ நிஜத்திலும் அப்படித்தான்.”

”ஏன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக்க நினைச்சீங்க?”

”அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே கூப்பிட்டாங்க. அப்போ ஒரு படத்தில் நடிச்சுட்டிருந்தேன். அதனால், உடனே போக முடியலை. மறுபடியும் கூப்பிட்டபோது, அந்தப் படத்தில் என் போர்ஷன் முடிஞ்சிருச்சு. அதனால், கலந்துக்கிட்டேன்.”

”தினசரி காலையில் பிந்து, கணேஷ்ராம் டான்ஸ் ஆடுவாங்க. நீங்க என்ன செய்வீங்க?”

”எனக்கு சாமி நம்பிக்கை உண்டு. காலையில் எழுந்ததும் சாமி கும்பிடுவேன். அதுதான் என் தினசரி வழக்கம். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதை ஒருநாள்கூட காட்டலை. இது எனக்கு ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்திச்சு.”

”ஏன்டா ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே வந்தோமோனு ஃபீல் பண்ணீங்களா?”

”அப்படி மட்டும் நினைச்சதே இல்லை. நூறு நாள் முடியும் வரை இருக்கணும்னுதான் நினைச்சேன்.”

” ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் உங்களைப் பற்றி வெளியே தெரியாத விஷயம்…”

”இருக்கு. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கற ஒவ்வொருவருக்கும் பிஸிக்கல் அண்டு மென்ட்டல் டெஸ்ட்டை வெச்சுத்தான் உள்ளேயே அனுப்புவாங்க. அப்படியே எனக்கு டெஸ்ட் வெச்சப்பவே, எனக்குத் தனியா இருக்கிறது பயம்னு பிக் பாஸ் டீமுக்குத் தெரியும். அப்படி இருந்தும், என்னை ஒரு வாரம் தனியறையில் இருக்கவெச்சு ஏமாத்திட்டாங்க” என்கிற சுஜாவுக்கு, ஓவியா கொடுத்த பிறந்தநாள் பரிசை மறக்கவே முடியாதாம்.

அப்படி என்ன பரிசு என்பதையும், ‘பிக் பாஸ்’ பற்றி வெளியே தெரியாத மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும் தெரிந்துகொள்ள, மறக்காம இந்த வீடியோவைப் பாருங்க.
Source: Vikatan

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்!

Chennai: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் உள்ளார். இதனால், கட்சித் தலைவர் பொறுப்பை தன் மகன் ராகுலிடம் ஒப்படைக்க அவர் முடிவுசெய்துள்ளார். மூத்த தலைவர்களும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ராகுல் காந்தி, இப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கு, அக்கட்சியின் காரியக் கமிட்டியின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். இதற்காக, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 5-ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற, டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால், டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 19-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதால், அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, டிசம்பர் 11-ம் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பெற்றார் சோனியா காந்தி. 19 ஆண்டுகாலம் தலைவர் பதவி வகித்த அவர், டிசம்பர் மாதத்தோடு விடைபெறுகிறார்.

Source: Vikatan

ஓவியா கேரக்டரே அப்படித்தான்!’ – ஆதரவுக்கரம் நீட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எதிராக நடத்தப்படும் காட்சிகள் குறித்து, கொதித்து எழுகின்றனர் நெட்டிசன்கள். ‘ஓவியா என்னுடைய தோழிதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்பது ஓவியாவின் நிஜ கேரக்டர்தான்” என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஓரிரு நாள்களாக நடிகை ஓவியாவை வெளியேற்ற, ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் செய்யும் காரியங்கள், அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. நேற்று வெளியான நிகழ்ச்சியில் ஓவியாவை, நடிகை நமீதா, காயத்ரி, ஜுலி போன்றவர்கள் நடத்திய விதம் பார்வையாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யார் அடுத்து வெளியேறப் போகிறார்கள் என்பதையே மையமாக வைத்து, பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். 15 போட்டியாளர்களில் தற்போது 10 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். ஓவியாவை விரட்டுவதற்கு பிக் பாஸ் குடும்பத்தினர் முயற்சி செய்தாலும், நேயர்கள் மத்தியில் ஓவியாவுக்கான ஆதரவு குவிந்துவருகிறது. இதுகுறித்து, ட்விட்டரில் ஓவியாவுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசினோம், “ஓவியா என்னுடைய நெருங்கிய தோழி. நானும் அவளும் நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தோகாவுக்குப் போனோம். அப்போதிலிருந்து எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவருடைய கேரக்டர் இயல்பாகவே அப்படித்தான். யாரைப் பற்றியும் அவர் தவறாகப் பேச மாட்டார். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பவர் ஓவியா. அவர் அப்படி இருப்பதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

Source: Vikatan

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கலப்புத் திருமணம்செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22), கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று, உடல்நலம் தேறினார்.

பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச் சாய்க்கப்பட்ட சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக, கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் டிசம்பர் 12 – அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

Source: Vikatan

சென்னை மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டு முன் தேர்வு ரத்து!

Chennai: சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரையாண்டு முன் தேர்வுகள் (2nd Midterm) ரத்து செய்யப்படுவதாக முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகச் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் Truncated பள்ளிகளுக்காக 10 முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்டத் தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்செயல்முறைகளுடன் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு முன் தேர்வுகள் (Pre Half yearly exams) தொடர் மழையால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஆசிரியப் பெருமக்கள் பாடங்களை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களின் வேண்டுகோளுங்கிணங்க மேற்காணும் அரையாண்டு முன் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 31-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்ட பள்ளிகளில் முன்அரையாண்டுத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்தது.

ஆளும் கட்சியினரின் கண்காணிப்பில் தீக்குளித்தவர்களின் உடல்கள் தகனம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் உடல்களைக் காவல்துறையினர் மிரட்டி உறவினர்களிடம் வழங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கிமுத்து அவர் மனைவி சுப்புலட்சுமி அவர்களின் குழந்தைகள் மதி சரண்யா என்ற 5 வயது குழந்தையும் அட்சய பரணிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் நேற்று தீக்குளித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் இசக்கிமுத்துவைத் தவிர மூன்று பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை, வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

உடனே காவல்துறையினர், இசக்கிமுத்துவின் தம்பி கோபியை மிரட்டி வலுக்கட்டாயமாக உடலை ஒப்படைத்துள்ளனர். உடலை வாங்காவிட்டால் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். திருநெல்வேலி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் சுதா கே.பரமசிவன் தலைமையில், மூன்று உடல்களும் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், மூன்று உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல், சுதா பரமசிவன் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே, சிந்துபூந்துறையிலுள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.

தீக்குளித்து இறந்தவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், உடலை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்துள்ளனர். ஆளும் அரசைச் சேர்ந்தவர்களும் காவல்துறைக்கு உறுதுணையாகச் செயல்பட்டுவருகின்றனர்.

Source: Vikatan

இதுக்கேவா.. மெர்சல்ல நீக்கப்பட்ட காட்சிகள் தோ வந்துட்டே இருக்கு – எடிட்டர் ரூபன்

இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது ‘மெர்சல்’. இந்தப் படம் ரிலீஸானதில் இருந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டுமென்று பாஜகவை சேர்ந்த தமிழிசை, ஹெச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், எதற்காக ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கமல் உட்பட சினிமாவைச் சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

ஆளுக்கொரு திசையில் ‘மெர்சல்’ திரைப்படத்தின் காட்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ” அடேய் படத்துக்கு நான்தான் டா எடிட்டர்”னு பதிவியிட்டிருக்கிறார். மெர்சல் சர்ச்சைகள் குறித்து அவருடன் பேசினேன்.

”அம்மா சென்னை, அப்பா கும்பகோணம். பிறந்தது சென்னை கல்யாணி ஹாஸ்பிஸ்டல்தான். பட், ஸ்கூல் படிச்சது எல்லாம் கும்பகோணம். அப்பாவுடைய பக்கம் பார்த்தால் மூன்று தலைமுறைகளாய் மேடை இசைக்குழு நடத்திவரும் இசைக் குடும்பம். கலை என்பது என் வாழ்க்கையில் சின்ன வயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். அதனாலேயே எனக்குப் படிப்பை விடக் கலை மீது ஆர்வம் அதிகம். என்னை பத்தாவது படித்து முடித்தவுடனே சைன்ஸ் குரூப் படிக்கச் சொல்லிதான் சேர்த்தார்கள். பட், எனக்குப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை.

அதனாலேயே, காலேஜ் படிக்கும் போது சென்னையில் லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்தேன். அப்போதுதான் எனக்கு கெளதம் சார் பழக்கம் ஏற்பட்டது. காலேஜ் படிக்கும் போது ஏதாவது இன்டென்ஷிப் செய்யலாம்னு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் முடிவு செய்து கெளதம் மேனன் சாரை போய் பார்த்தோம். அப்போது ‘வேட்டையாடு விளையாடு’ ஷூட்டிங் போயிட்டு இருந்தது.

அந்த நேரத்தில் எல்லோருடனும் கெளதம் வாசுதேவ் மேனன் சார் பேசும் போது ” ப்ரீ டைமில் என்ன செய்றீங்கனு” கேட்டார். நான் உடனே, ” எனக்கு சாப்ட்வேர் நாலேஜ் இருக்கு. அதனால் ப்ரெண்ட்ஸோட ஷார்ட் ஃபிலிம் எல்லாம் எடிட் செய்வேன்” னு சொன்னேன். ‘ஓ அப்படியா, அப்போ நீ எடிட்டர் ஆண்டனிக்கிட்ட எடிட்டரா சேர்ந்துக்கோ’னு சொன்னார். அப்படிதான் எடிட்டர் ஆண்டனி அறிமுகம் கிடைத்தது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வரைக்கும் கெளதம் சார்கிட்டதான் இருந்தேன்.

அவரிடம்தான் எல்லாவற்றையும் கத்துக்கிட்டேன். ” வேட்டையாடு விளையாடு’ படத்தின் போது கமல் சாருடன் ஒரு சின்ன ஷாட்டில்கூட நடித்திருப்பேன். அப்படியே லைப் போயிட்டு இருந்தபோதுதான் 2011 ஆம் வருஷத்தில் ‘கண்டேன்’ படத்துக்கு முதல் முறையாய் எடிட்டர் ரூபனாய் அறிமுகமானேன். இப்போது ‘மெர்சல்’ வரைக்கும் முப்பது படம் பண்ணிட்டேன். இதுதான் என் சின்ன ப்ளாஷ் பேக்’’ என்றவரிடம் அட்லியின் முதல் அறிமுகம் பற்றிக் கேட்டோம்.

’’என்னுடைய முதல் ஹிட் திரைப்படம் ‘ராஜா ராணி’தான். அதன் வெற்றியை என்னால் மறக்கவே முடியாது. எனக்கான ஒரு அங்கீகாரத்துக்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ‘ராஜா ராணி’ வாய்ப்பு வந்தது. எப்போதும் கன்டென்ட்தான் ஜெயிக்கும். அதற்காகத் தான் நம்ம வேலைப் பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘ராஜா ராணி’ படத்துக்காக மட்டும் வேலை பார்த்தேன். எனக்கான பெயரை இந்தப் படம்தான் வாங்கிக் கொடுத்தது. எத்தனைத் தெறி, வேதாளம் வந்தாலும் ‘ராஜா ராணி’ தான் ஃபர்ஸ்ட். அதற்கு அட்லிக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்.

‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்துக்கு நான் எடிட்டராக ஒர்க் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நான் எடிட் செய்து கொண்டிருந்த ஸ்டூடியோவில் அட்லியின் ஷார்ட் ஃபிலிம் டப்பிங் போயிட்டு இருந்தது. அட்லியை ஷங்கர் சாரின் உதவி இயக்குநராய் தெரியும். ஜட்ஸ்ட் ஹாய், பாய் சொல்லுற அளவுக்கு ஆன ஒரு ரிலேஷன்ஷிப்தான்.

அன்னைக்கு ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் ட்ரெய்லர் ஒர்க் செய்து முடித்து அதை யாரிடமாவது போட்டு காட்ட வேண்டுமென்று யாராவது இருக்காங்களா என்று தேடி கொண்டிருந்த போது, அட்லி என் இடத்துக்கு ஹாய் சொல்வதற்காக வந்தார். அப்போது, அட்லியை கூப்பிட்டு உட்கார வைத்துப் படத்தின் ட்ரெய்லரை போட்டுக் காட்டினேன்.

அதைப் பார்த்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு அட்லி அந்த ட்ரெய்லரை காட்டினார். அப்போது அட்லி ” நான் படம் பண்ணினால், நீங்கதான் எடிட்டர்” என்று சொன்னார். அப்படிதான் அட்லியின் அறிமுகம் மற்றும் ‘ராஜா ராணி’ தொடர்ந்து ‘மெர்சல்’ வரை வாய்ப்பு கிடைத்தது. என் மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்கான சுதந்திரத்தை அட்லி கொடுத்தார்’’.

’கெளதம் மேனன் படத்தில் எப்போது வொர்க் பண்ணப் போறீங்க’ என்றால், ’’எனக்கும் ஆசையிருக்கு. அவருடன் நிறைய சந்தர்ப்பத்தில் சந்தித்து இருக்கின்றேன். பட், எங்களுக்கான படத்தைப் பற்றி பேசியது இல்லை. என் படங்களை பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு பேசுவார். ‘விவேகம்’ படத்துக்காக செர்பியா சென்று விட்டு சென்னை வந்த போது ஒரே விமானத்தில்தான் இருவரும் வந்தோம். அப்போது நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்’’ என்றவர் தொடர்ந்தார்.

’’ ‘மெர்சல்’ படத்தில் நிறைய சீன்ஸ் எடிட் செய்வதற்கு இருந்தது. காதல், அப்பா, மாஸ் சீன்ஸ் என்று எல்லாமே. எனக்கு அப்பா விஜய் வெற்றி மாறன் சீன்ஸ் எடிட் செய்த போது ரொம்ப பிடித்திருந்தது. இந்தப் படத்தில் முதலில் எடிட் செய்தது அந்த சீன்ஸ்தான். எனக்குப் பிடித்த சீக்வென்ஸ் சீன்ஸூம் அதுதான். அந்த சீக்வென்ஸ் சீன்ஸ் எடிட் செய்வதற்கு நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். படத்தில் நிறைய கேரக்டர்ஸ், கன்டென்ட் இருந்தது. அது எல்லாத்தையும் ஒரு மூன்று மணி நேரத்துக்குள்ளே கொண்டு வரணும்னு நினைத்தபோது இதற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருந்தது.

நிறைய காமெடி சீன்ஸ், லவ் சீன்ஸ் எல்லாம் எடிட் செய்து, பிறகு நேரம் அதிகமானதான் அதனையெல்லாம் எடிட் செய்தோம். பட், எடிட்டிங் பொருத்தவரைக்கும் எனக்கு நிறைய சுதந்திரத்தை அட்லி கொடுத்தார். சில சீன்ஸ் வேண்டும், வேண்டாம் என்று எங்களுக்குள் வாக்குவாதம் எல்லாம் நடக்கும். அதற்கான தேவை மற்றும் புரிதலை புரிந்து கொண்டு இருவரும் வேலைப் பார்த்தோம். படம் சென்சாருக்கு போறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ளேயே நிறையப் பேசி முடிவு செய்துதான் அனுப்பினோம்.’’

எடிட் செய்யும் போது சில காட்சிகள் இந்தளவுக்குச் சர்ச்சைக்குள்ளாகும்னு நினைத்தீர்களா?

’’இல்லை, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏன்னா, படத்தில் சமூக தொடர்பான சில விஷயங்களைத்தான் சொல்லியிருந்தோம். நம்ம பாக்கும் போது நல்லதானே இருக்கிறது என்றுதான் தோன்றியது. தப்பாக எதுவும் தெரியவில்லை. அதையும் மீறி படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகுமா இல்லையா என்பதை நம்ம சொல்ல முடியாது. ஏன்னா, சென்சாருனு ஒரு விஷயம் இருக்கு.

சென்சார் போர்ட்டில் சொன்ன சில விஷயங்களை நாங்களும் ஏத்துக்கிட்டுதான் சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறோம். ஒரு தடவைக்கு மூன்று முறைப் பார்த்துத்தான் சென்சார் போர்ட் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அவங்களும் படத்தை முழுமையாக பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் எந்தக் காட்சியும் சேர்க்கவில்லை. இது எல்லாத்தையும் மீறி படம் ரிலீஸானதுக்கு பிறகு இப்படி சர்ச்சைக்குள்ளாகும் என்று நினைக்கவில்லை.’’

சர்ச்சை ஆனது எந்த மாதிரியான ஒரு ஃபீல்லை உங்களுக்கு கொடுத்திருக்கு?

’’உண்மையை சொல்லணும்னா, சினிமா ஒரு கலை. படத்தின் கன்டென்ட்டில் இருக்கக்கூடிய ஒரு டயலாக்கை ஒரு நடிகர் சொல்லியிருக்கிறார். அதற்காக, அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது தப்பு. கருத்து சுதந்திரம் என்பது எங்கயிருக்கு என்ற கேள்வியைத்தான் இது எழுப்புகிறது. நம்ம வாழ்றதுக்கு நம்மதான் வரி கட்டுறோம். தேவையில்லாத விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கு. சினிமாவை ஒரு பிரச்னையாக எடுத்து வைத்துப் பேசுவது சரியில்லை.

சில காட்சிகளை நீக்கச் சொல்வது வருத்தப்படக் கூடிய விஷயம்தான். ஹாலிவுட்டிலும் படங்கள் எடுக்குறாங்க. கவர்மெண்ட்யை டார்க்கெட் பண்ணிக்கூட காட்சிகள் வைக்குறாங்க. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சென்சார் போர்ட் அனுமதித்த ஒரு படத்தை பார்த்து சரியில்லைனு சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.’’

‘மெர்சல்’ படத்தில் உங்கள் எடிட்டிங்யை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்?

’’இந்தப் படத்தின் ஆடியோ லான்சின் போதுதான் விஜய்யை பார்த்தேன். அப்போதே என்னைப் பாராட்டினார். படத்தின் டீசர் வெளியான உடன் என்னைக் கூப்பிட்டு நல்லாயிருக்குனு சொன்னார். ‘தெறி’ படத்துக்காக எனக்கு இருந்த நேரம் ‘மெர்சல்’ படத்துக்காக இல்லை. அதனால், மெர்சல் டீசர் மூன்று மணி நேரத்திலேயே ரெடி பண்ணினேன். டீசருக்கு ரொம்ப மெனக்கெட்டேன். டீசர் பார்த்தவுடன் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது.

இந்தப் படத்தின் நீளம் எடிட்டிங் செய்யும் போது இதைவிட அதிகமாகவே இருந்தது. அதை எல்லாம் சுருக்கி படத்துக்குத் தேவையான விஷயங்களை மட்டும்தான் கொடுத்தோம். அதே போல் தமிழ் சினிமாவில் பாடலுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுப்போம். ஒரு பாட்டுக்கு ஐந்து நிமிடம் என்று வைத்தால் கூட பாட்டுக்காக மட்டுமே அரைமணி நேரம் சென்று விடும். இதுதான் ஆங்கில படத்துக்கும், தமிழ்ப் படத்துக்கும் இருக்கிற வித்தியாசம்.

மாஸ் ஹீரோ படத்துக்காக சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் இந்தப் படத்தில் ஆக்டர்ஸ், காமெடியன்ஸ் என எல்லோரும் பெரிய ஆட்கள். எல்லோருக்கும் சமமான இடம் கொடுக்கணும். படத்திலும் நிறைய எமோஷன்ஸ் இருக்கு. அதனால் எல்லோவற்றையும் சேர்த்துக் கொடுக்கும் போது டைம் எடுக்கத்தான் செய்யும்.’’

மெர்சல் படத்தின் எடிட்டிங் போது எந்த இடத்திலாவது எமோஷனல் ஆகியிருக்கீங்களா?

”நிறையவே. பேஸிக்காகவே நான் ரொம்ப எமோஷனல் டைப். அதனால், இந்தப் படத்தின் எடிட்டிங் போது அந்த அனுபவம் நிறையவே இருந்தது. ப்ளாஷ்பேக் காட்சியை எடிட்டிங் செய்யும் போது என்னையே அறியாமல் எமோஷனல் ஆகி விட்டேன். கண்ணீல் இருந்து கண்ணீர் வந்து கொண்டேதான் இருந்தது. அட்லி படத்தில் எப்போதும் எமோஷனலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்தப் படத்தில் கேட்கவே வேண்டாம்”.

ட்விட்டரில் ‘மெர்சல்’ படத்துக்கு நான்தான் டா எடிட்டர் அப்படினு போட்டியிருந்த ட்விட் பற்றி?

’’அந்த ட்விட் கொஞ்சம் காமெடி டோனில்தான் போட்டிருந்தேன். அவங்க அவங்க வேலையை அவங்க பார்த்தால்தான் நன்றாகயிருக்கும். என் படத்துக்கு நான் தானே எடிட்டர். வரவங்க போறவங்க எல்லாம் எடிட் பண்ணிட்டு போறதுக்கு என் வேலை சும்மாயில்லை. இதற்காக முறையாக நான் பயிற்சி எடுத்து, படித்து, இத்தனை வருடம் உதவி எடிட்டராக இருந்து வந்திருக்கின்றேன். என் படத்தை என்னை எடிட் செய்ய விடவில்லை என்றால் எப்படி.

நான் எப்படி ஜாலியான டைப் என்பது என்கூட இருக்குறவங்களுக்கு தெரியும். அதனால், ஒரு காமெடி டோனில்தான் போஸ்ட் பண்ணியிருக்கேனு தெரிந்து கொண்டு நிறையபேர் போன் பண்ணி பேசினார்கள். கஷ்டம் வரும் சூழ்நிலையில் கூட அதைச் சிரித்து கொண்டேதான் சமாளிப்பேன்.இதைப் பார்த்த எல்லோரும் சிரித்து கொண்டேதான் என்னிடம் பேசினார்கள். நம்மனால நாலு பேர் சந்தோஷமாகயிருந்தா நல்லதுதானே.

இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னாடி கூட நிறைய பிரச்னைகள் இருந்தது. அப்போதும் கூட நாங்க யாரும் சோர்ந்து விடவில்லை. அட்லி இப்போதுகூட போன் செய்து பேசினார். சிரித்துக் கொண்டேதான் பேசினார். பிரச்னைகள் வரும் அதை எப்படி சமாளிக்கணும் அப்படிங்குறதுதான் விஷயம். படத்துல இருக்குற எமோஷனல் காட்சிகளுக்கே செம ரெஸ்பான்ஸ். ஆனா, அதுக்கும் மேல இருக்கிற பல காட்சிகளை நீளம் கருதி குறைச்சுட்டோம். அதுலாம் சீக்கிரமே ரிலீஸ் பண்றோம். அது இன்னும் மெர்சலா இருக்கும்!’’ என்றார்.

Source: Vikatan

‘அ.தி.மு.க பிளவுக்கு இவர்கள்தான் காரணம்’! – கொதிக்கும் தினகரன் ஆதரவாளர்

Chennai: அ.தி.மு.க பிளவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்தான் காரணம் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளர் திருவேற்காடு சீனிவாசன் தெரிவித்தார்.

அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். புழல் ஒன்றியத்தில் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்ட அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு யார் காரணம்?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தலைமையில் அ.தி.மு.க செயல்பட முன்மொழிந்தவர்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உண்டு. பொதுக்குழுவில் சசிகலாவை, பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தீர்மான நகலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர். அடுத்து, சசிகலாவை அ.தி.மு.க-வின் சட்டசபைத் தலைவராகத் தேர்வு செய்து ஆளுநரிடம் அந்தக் கடிதத்தை எம்.எல்.ஏ-க்கள் கொடுத்தனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து நாடகத்தை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலாவும் தினகரனும்தான். சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கட்சி நிர்வாகிகள் அஃபிடவிட்டை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தவர்கள், மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தியதோடு இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரினர். இதனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துக்குப் புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும் சசிகலாவுக்கு அ.தி.மு.க அம்மா என்ற பெயரைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இடைத்தேர்தல் பிரசாரத்தில் தினகரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் மாறிவிட்டார். சசிகலாவையும் தினகரனையும் எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். கட்சிக்குத் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வதுக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளார். இதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னால் சிலர் சென்றுள்ளனர். ஆனால், அடிமட்ட தொண்டர்கள் சசிகலா, தினகரன் தலைமையை ஏற்றுவிட்டனர். வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள கட்சி ஆண்டு விழாவில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பார்கள். பரோல் நிபந்தனை காரணமாக சசிகலாவைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பதவியிலிருக்கும் அவரது ஆதரவாளர்கள் சந்திக்கவில்லை. தினகரன் கூறியதுபோல எடப்பாடி பழனிசாமி தரப்பில் எங்களது ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். தேவைப்படும்போது அவர்கள் வெளியில் வருவார்கள்.

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் வரும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?திருவேற்காடு பா. சீனிவாசன்

ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் இருக்கலாம். ஆனால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். நிலவேம்புக் குடிநீர் போன்ற மக்கள் சேவையில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். இதனால் மக்களும் எங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மக்களுக்கு நல்லது செய்வதை இந்த அரசு தடுத்தால் அவர்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். இதனால், நிலவேம்புக் குடிநீர் விநியோகத்தில் எங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஆவடி, திருநின்றவூர், திருவேற்காடு, மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், புழல் ஆகிய பகுதிகளில் இலவசமாக நிலவேம்புக் குடிநீரை விநியோகித்துள்ளோம்.

டெங்குக் காய்ச்சலால் மக்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலவேம்புக் குடிநீரை ஆர்வமாகக் குடிக்கின்றனர். உள்ளாட்சித்துறையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் டெங்கு பாதிப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அரசு இயந்திரம் செயலிழந்துவிட்டது. கொசுவைக் கட்டுப்படுத்த எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகளும் எந்த வேலைகளையும் செய்யவில்லை. இது, மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜெயலலிதா ஏற்படுத்திய இந்த ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அதிகாரம் எங்கள் கையில் இல்லை என்றாலும் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் கட்சியும் ஆட்சியும் எங்கள் கைக்கு வரும். அப்போது ஜெயலலிதாவின் கனவு நிஜமாகும்

அ.தி.மு.க. ஆண்டு விழா தினகரன் தரப்பினர் புறக்கணித்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே?

துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே துரோகிகளின் பிடியில் அ.தி.மு.க. தலைமைக் கழகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆண்டு விழாவை நடத்தியுள்ளனர். அதற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் வரும் 24 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த விழாவைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்.

Source: Vikatan

“தியேட்டர்ல வாட்ஸ்அப் பார்க்க வைக்காதீங்க ப்ளீஸ்!” – ஓர் இயக்குநரின் வேண்டுகோள்

‘பாணா காத்தாடி’… இயக்குநருக்கும் ஹீரோ அதர்வாவிற்கும் முதல் படம். இன்றைய ஆந்திர மருமகள் சமந்தா இதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் முதன்முதலில் திரையில் தோன்றியது இந்த படத்தில்தான். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் அடுத்ததாக இயக்கியிருக்கும் படமான ‘செம போத ஆகாத’ பற்றி தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம்.

ஷார்ட் ஃபிலிம்னா என்னனே தெரியாத சமயத்துல அதுக்கு தேசிய விருது வாங்கியது பத்தி சொல்லுங்க…

“ஆமாங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஷாட்ர் ஃபிலிம்க்கான ஸ்பேஸ் ரொம்ப ரொம்ப குறைவு. நாங்க ஃபிலிம் இன்ஸ்டியூட்ல படிச்சதுனால ஷார்ட் ஃபிலிம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அந்த நேரத்துலதன் ஃபிக்சன் கேட்டகரில தேசிய விருது கிடைச்சது. எடிட்டர் லெனின் தான் எங்களோட பெரிய இன்ஸ்பிரேஷன். அவர்தான் ஷார்ட் ஃபிலிம்க்கான ஒரு அமைப்பை கொடுத்தார். ஆனா, இப்போ கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மாதிரியான ஆட்கள் இன்னைக்கு ஷார்ட் ஃபிலிமை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயிட்டாங்க. படம் இயக்கணும்னு கனவோடு இருக்கவங்களை ஷார்ட் ஃபிலிம் மூலமா சினிமாக்குள்ள போகலாம்னு ஒரு ட்ரெண்ட் செட் பண்ணிட்டாங்க.”

ஷார்ட் ஃபிலிம் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு ‘பாணா காத்தாடி’. அந்த இடைவெளிக்கான காரணம் என்ன?

“ஷார்ட் ஃபிலிம்களுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, படம் பண்ண முடியாம போச்சு. அந்த நேரங்கள்ல நான் டிவில கொஞ்சம் பிஸியா இருந்தேன். சீரியல், ரியாலிட்டி ஷோனு நிறைய எபிசோட்கள் பண்ணேன். சன் டிவில ‘நாளைய நட்சத்திரம்’னு ஒரு ஷோ பண்ணோம். அப்புறம் ‘கிங் க்வீன் ஜேக்’னி விஜய் டிவில ஷோ பண்ணினோம். அதுலதான் அனிருத், தர்புகா சிவா எல்லாம் பெர்ஃபார்ம் பண்ணாங்க. ஜெகன், ரம்யாவுக்கு இதுதான் ஆங்கரிங்ல முதல் ஷோ. இப்படி நிறைய ரியாலிட்டி ஷோக்கள் பண்ணிட்டு இருந்ததுதான் காரணம்.”

‘பாணா காத்தாடி’ படத்துல அதர்வா, சமந்தானு எப்படி முடிவு பண்ணீங்க?

“முதல்ல பண்ண வேண்டிய படம் இன்னும் பண்ணலை. அந்த கதையைதான் தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். அப்போதான் இந்த கதையை படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. இப்போவும் அந்த கதையை பண்ணலாம்னு தயாரிப்பாளர் சொல்லிருக்காங்க. அது ஹாரர் ஜானர்ல இருக்கும். இந்த கதை இல்லாம இன்னொரு கதைக்குத்தான் அதர்வா ஹீரோனு முடிவு பண்ணிருந்தேன். சமந்தா ஏற்கனவே சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் முதலில் வெளியானது ‘பாணா காத்தாடி’ தான். படத்துக்கு மூணு மாசம் வொர்க்‌ஷாப் பண்ணோம். அதனால அவங்க புது முகங்களாவே தெரியலை. முரளி சாரை கலாய்க்கத்தான் அந்த படத்துல அவருக்கு ஒரு சீன் வெச்சோம். அது அவருக்கும் தெரியும். அவர் அவ்ளோ ஸ்போர்டிவா எடுத்து நடிச்சார். கதையில நிறைய மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுச்சு.”

அதர்வா அப்பவும் இப்பவும் உங்க பார்வையில எப்படி இருக்கார்? என்ன வித்தியாசம் இருக்குனு நினைக்குறீங்க?

“அதர்வாவை காலேஜ் ஸ்டூடன்டாகவும் பார்த்தேன். இப்போ ஒரு பெரிய சினிமா ஸ்டாராகவும் பாக்குறேன். உண்மையாக அதர்வா ஒரு சினிமா வெறியன். சின்னச்சின்ன நுணுக்கமான விசயங்களை கூட அருமையா நடிக்கிறார். சீன் என்னனு சொல்லிட்டா போதும் சூப்பரா மேனேஜ் பண்ணிடுவார். பாலா சார் படத்துல நடிச்சு நிறைய விசயங்கள்ல தன்னை செதுக்கி தயார்ப்படுத்தியிருக்கார். காலேஜ் பையான அதர்வாவுக்கும் இப்போ இருக்கும் அதர்வாவுக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருக்குன்னே சொல்லலாம். இப்போ அவரே இந்த படத்தை தயாரிக்கிறார்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. ”

‘பாணா காத்தாடி’க்கு பிறகு இந்த படம் எடுக்க இவ்ளோ இடைவேளை ஏன்?

“நிறைய ஷோ பண்ணிட்டு இருந்தேன். மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் மாதிரியான நிகழ்ச்சிகளை இயக்கிட்டு இருந்தேன். ஒரு வகையில் இதுவும் படம் பண்ற மாதிரிதான். ஒரு எபிசோடுக்கு 15 லட்சம் வரை செலவு செய்யப்படுது. கோடிக்கணக்கில் செலவு செஞ்சு பிரம்மாண்டமா நிகழ்ச்சி பண்றோம். டிவி இல்லைனா சினிமால நிறைய பேர் காணாமல் போயிருப்பாங்க. அதனால டிவில வொர்க் பண்றதும் ஹாப்பிதான். முதல்ல நம்மளோட அடிப்படை விசயங்களை தயார்படுத்திட்டுதான் மத்ததுக்கு போகணுங்கறது தான் என் லாஜிக். நடுவுல வேறொரு கதை ப்ளான் பண்ணேன். அது மிஸ் ஆகிடுச்சு. ஆனா, இனி அந்த கேப் இருக்காதுனு உறுதியா சொல்றேன்”.

‘செம போத ஆகாத’ என்ன மாதிரியான படம்?

“முழுக்க முழுக்க கமர்சியல் என்டர்டெயினர் படமா கண்டிப்பா இது இருக்கும். கொஞ்சம் போரான உடனே தியேட்டர்குள்ள வாட்ஸ்அப் பார்க்க ஆரம்பிச்சிடுறாங்க. ஆனா, இதுல அந்த சூழல் வராது, வரக்கூடாதுனு ப்ளான் பண்ணிருக்கோம். நிறைய ஸ்டரஸ்ல இருக்க மக்கள் ரிலாக்ஸ் பண்ண படம் பாக்க வர்றாங்க. கண்டிப்பா ‘செம போத ஆகாத’ சந்தோசப்படுத்தும்னு நம்புறோம்.”

உங்களோட ரெண்டு படத்துலயுமே யுவன் இருக்காரே…

“என் முதல் படத்துக்கு கிடைச்ச வெற்றிக்கு யுவன் முக்கிய பங்கு. எனக்கும் யுவனுக்கும் வேவ் லெங்த் செட் ஆகிடுச்சு. ‘செம போத ஆகாத’ படத்துக்கு கதை சொன்ன அடுத்த நிமிஷம் கம்போசிங் போலாமானு கேட்டார். மெலடி, சைலன்ஸ், த்ரில்லர்னு யுவன் இந்த படத்தில புகுந்து விளையாடி இருக்கார். சீக்கிரம் யுவன் ரசிகர்களுக்கு விருந்து உண்டு. யுவன் இல்லாமல் படம் பண்ணமாட்டேன். என் அடுத்த படங்கள்ல நிச்சயமா யுவன் இருப்பார். ”

அடுத்த ப்ளான் என்ன?

“மூணு கதை காத்திட்டு இருக்கு. இனிமே கேப் விழுந்திட கூடாதுனு கவனமாவே இருக்கேன். அடுத்த படத்துக்கான வேலைகள் இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பிக்கும். அதுல அதர்வாவுக்கு ஒரு கதை ப்ளான் பண்ணிருக்கேன். ஆனா, யுவன் மூணு படத்துலையும் இருப்பார். ‘செம போத ஆகாத’ படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கிட்டாங்க. ‘மெர்சல்’படத்துக்கு பிறகு நாங்கதான் வருவோம்னு நினைக்கிறேன்.”

Source: Vikatan

ஒன் லைன்லயே பின்னியெடுப்பார் இந்த மகிழ்மதி மஹாராஜ்!

சிறுவயதில் அச்சிறுவனுக்குச் சரித்திர, புராணக் கதைகளைப் படிப்பதில் அவ்வளவு ஆர்வம். ‘அமர் சித்ர’ கதைகளை மீண்டும் மீண்டும் படித்து, தன்னுடைய கற்பனை வளத்துக்குத் தீனிபோட்டுக்கொண்டான். தன்னைச் சுற்றி இருப்பவர்களிடையே தனது கதைகளை (கனவுலகத்தை) சொல்லி, அவர்களை வியப்புக்குள்ளாக்குவதில் வல்லவன் ஆனான். பின்னாளில் அச்சிறுவனின் மகிழ்மதி பேரரசில், நாம் அனைவரும் மக்களாக மாறியதில் வியப்பொன்றுமில்லை!

ராஜமெளலி

1965ல் அக்டோபர் 10ஆம் நாள் கர்நாடகத்தில் பிறந்தார் ராஜமௌலி. பிறந்தது கர்நாடகா என்றாலும், வளர்ந்தது எல்லாம் ஆந்திராவில்தான். தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான ‘விஜயேந்திர பிரசாத்’ தான் இவரது தந்தை. சிறுவயதில் இருந்தே தன் தந்தையிடம் பல கதைகளைக் கேட்டு வளர்ந்த ராஜமௌலி, தனது இளம்பருவத்தில் கேமராமேன் வெங்கடேஸ்வர ராவிடம் உதவியாளராகவும், ஏவிஎம் ஸ்டுடியோவில் ரெகார்ட்டிங் பிரிவிலும் பணியாற்றினார்.

தன் தந்தை பிற இயக்குநர்களுக்குச் சொன்ன கதைகள், திரைப்படத்தில் முழுமையாக வருவதில்லை என்ற வருத்தம் அவரிடம் இருந்துகொண்டே இருந்தது. தன்னால் அந்த இயக்குநர்களைவிட சிறப்பாக அந்தக் கதையைத் திரையில் காட்ட முடியும் என்று முழுதாக நம்பினார், அதில் வெற்றியும் பெற்றார்.

பழம்பெரும் இயக்குநரான கே.ராகவேந்திரா ராவின் கடைசி உதவியாளராகச் சேர்ந்தார் ராஜமௌலி. அவர் தயாரித்து வந்த ‘சாந்தி நிவாசம்’ என்ற சீரியலின் பல எபிசோட்களையும், தெலுங்கு தேச கட்சியின் விளம்பரப் படங்களையும் இயக்கினார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 17-ல் இருந்து 18 மணிநேரம் வரை உழைத்தார்.

ராஜமெளலி

கதை, திரைக்கதை எழுதி ராகவேந்திரா ராவ் தயாரிக்கவிருந்த படத்திற்கு ஜூனியர் என்டிஆர் நடிக்க ஒப்பந்தமானார். தனது முதல் அசிஸ்டென்ட்ஒருவருக்கு வாய்ப்பை அளித்தார், ராகவேந்திரா ராவ். ஆனால், அந்த உதவியாளர் வேறொரு சீரியலை இயக்கிக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பு கேட்காமலேயே ராஜமௌலிக்கு வந்தது. இவ்வாறு இயக்கிய முதல் படமான ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ மெகா ஹிட். ஜூனியர் என்டிஆரின் முதல் படமான ‘Ninnu Chudalani’ யின் தோல்விக்கு, மிகப்பெரிய ஆறுதல் அளித்தது.

என்னதான் படம் ஹிட்டுனாலும் பெருமை, அங்கீகாரம் எல்லாமே தன்னுடைய குருவான ராகவேந்திரா ராவிற்கே கிடைத்தது. அப்போதைய தெலுங்கு திரையுலகம் அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியைப் பற்றி தெரிந்து கொள்ளவும் இல்லை, தெரிந்து கொள்ள விரும்பவும் இல்லை. ராஜமௌலிக்கு இது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இரண்டாவது படத்தில் தனது முத்திரையை வலுவாகவே பதிக்க வேண்டும் என்று எண்ணினார் ராஜமௌலி.

தான் யார் என்பதை நிரூபிக்க கிட்டதட்ட 2 வருட காலம் தயாரிப்பாளர்களைத் தேடிக்கொண்டே இருந்தார். அப்பொழுது, vmc என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்க, ராஜமௌலி சொன்ன கதையும் அவர்களுக்குப் பிடித்ததால், ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படமே ‘சிம்ஹாத்ரி’. இதுவும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கு திரையுலகத்திற்கு அப்பொழுதுதான் தெரிந்தது ‘ராஜமௌலி’ யார் என்று.

ராஜமெளலி

அடுத்தடுத்து வந்த ஷை(2004), சத்ரபதி(2005), விக்ரமாகுடு(2006), எமதொங்கா(2007), மகதீரா(2009), மரியாதை ராமண்ணா(2010), ஈகா(2012), பாகுபலி I & II (2015,2017) என ஒவ்வொன்றும் சொல்லி அடித்த கில்லியாக… அனைத்துப் படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி, தொடர்ந்து 10 வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றார். ஆந்திராவில் ‘ஜக்கண்ணா’ என்று ரசிகர்களாலும், நடிகர்க ளாலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

ராஜமௌலியைப் பற்றி சொல்லும்போது, அவரது திரைக்கதையைப் பற்றியும் கூறவேண்டும். தன் தந்தை கூறும் ஒன்-லைன்களுக்கு அருமையான திரைக்கதை எழுதி அசத்திவிடுவார். ‘சிம்ஹாத்ரி’ முதல் ‘பாகுபலி’ வரை என அனைத்தும் இவரது தந்தை கூறிய ஒன்-லைன்களே.

எப்பொழுதும் தனது திரைக்கதையை மட்டுமே நம்புபவர். படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு, மொத்தத் திரைக்கதையையும் சீன் பை சீன், ஷாட் பை ஷாட், கேமரா ஆங்கிள், ஸ்டோரிபோர்டு என எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கிளம்புவதுதான் ராஜமௌலியின் வழக்கம்.

ராஜமெளலி

ஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் இரவு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களையும் கண்ணாடி முன் நின்று நடித்துப் பார்த்து, மேருக்கேற்றிவிட்டு பின்னர்தான் படப்பிடிப்பில் நடித்துக் காட்டுவார். நடிகர்களிடம், தான் நடித்துக் காட்டிவிட்டு, பின்னர், அவர்களிடமிருந்து அவர்கள் பாணியில் இயல்பான நடிப்பைப் பெறுவதுதான் ராஜமௌலியின் ஸ்டைல்.

இவரது ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தில் கல்லூரி வாழ்க்கையையும், சிம்ஹாத்ரியில் ஆக்ஷனையும், ஷையில் ரக்பி விளையாட்டையும், சத்ரபதியில் அகதி ஒருவன் டான் ஆவதையும், விக்ரமாகுடுவில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிபற்றியும் (இது ‘சிறுத்தை’யாக தமிழில் ரீமேக் ஆனது), எமதொங்காவில் எமலோக அட்டகாசங்களையும் (ரஜினி நடித்த ‘அதிசயப் பிறவி’யின் இன்ஸ்பிரேஷன்), மகதீராவில் ராம்சரணுக்கும், காஜலுக்கும் இடையே உள்ள பூர்வஜென்ம உறவையும், மரியாதை ராமண்ணாவில் பூர்விக சொத்தை விற்க செல்லும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்னையையும் (சந்தானம் நடித்து தமிழில் வெளிவந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்), ஈகாவில் ஈயின் காதலையும், பாகுபலியில் அரச வம்சத்தின் வன்மத்தையும் எனத் தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு கதையையும், வெவ்வேறு களங்களைச் சார்ந்து அமைத்து வித்தியாசத்தைக் காண்பித்தார் ராஜமௌலி.

இவரது படங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால்,’பழிவாங்கலே’ முதன்மையாகக் காணப்படும். இவரது படங்களில் காணப்படும் வில்லன்கள் அனைவரும் படுபயங்கரமாகவே காணப்படுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று கேட்டால்,’ஹீரோவின் பலத்தை காட்டவே’ இவ்வாறு செய்கிறேன் என்றார். புதுமையான ஆயுதங்களையும், சண்டைக்காட்சிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுவருவதிலும் வல்லவர். மாவீரனில் (மகதீரா) ராம்சரண் 100 வீரர்களை அடிக்கும் காட்சியே இதற்கு போதுமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி அது.

பாகுபலியைப் பார்த்து இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல, உலகமே வியந்தது. பாகுபலியின் வெற்றி இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களின் பட்டியலில் ராஜமௌலியைச் சேர்த்தது. இந்தியாவின் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையும் பெற்றது.

இசையமைப்பாளர் கீரவாணி, படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், கேமராமேன் செந்தில், ஆடை வடிவமைப்பாளர் ராமா ராஜமௌலி, சண்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன் என அனைவரும் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை, ராஜமௌலி உடன் ஒரே டீமாக வேலை செய்கிறார்கள்.

தன் படங்கள் தோற்றுவிடுமோ என்ற பயம் இவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. தனது முந்தைய படத்தை விட இந்தப்படம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவரிடத்தில் இருக்கிறது.

தொடர் வெற்றிகள் அனைத்தையும் தலைக்கேற்றாமல், பயத்துடன் பணியாற்றும் பாங்குதான், அவரது வெற்றி ரகசியம். சினிமாவிற்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும் இந்த ரகசியம் பொருந்தும். உங்களோட ‘மஹாபாரதம்’ படத்துக்காக வி ஆர் வெயிட்டிங்… ஜெய் மகிழ்மதி!

Source: Vikatan