ஓவியா கேரக்டரே அப்படித்தான்!’ – ஆதரவுக்கரம் நீட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எதிராக நடத்தப்படும் காட்சிகள் குறித்து, கொதித்து எழுகின்றனர் நெட்டிசன்கள். ‘ஓவியா என்னுடைய தோழிதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்பது ஓவியாவின் நிஜ கேரக்டர்தான்” என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஓரிரு நாள்களாக நடிகை ஓவியாவை வெளியேற்ற, ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் செய்யும் காரியங்கள், அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. நேற்று வெளியான நிகழ்ச்சியில் ஓவியாவை, நடிகை நமீதா, காயத்ரி, ஜுலி போன்றவர்கள் நடத்திய விதம் பார்வையாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யார் அடுத்து வெளியேறப் போகிறார்கள் என்பதையே மையமாக வைத்து, பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். 15 போட்டியாளர்களில் தற்போது 10 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். ஓவியாவை விரட்டுவதற்கு பிக் பாஸ் குடும்பத்தினர் முயற்சி செய்தாலும், நேயர்கள் மத்தியில் ஓவியாவுக்கான ஆதரவு குவிந்துவருகிறது. இதுகுறித்து, ட்விட்டரில் ஓவியாவுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசினோம், “ஓவியா என்னுடைய நெருங்கிய தோழி. நானும் அவளும் நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தோகாவுக்குப் போனோம். அப்போதிலிருந்து எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவருடைய கேரக்டர் இயல்பாகவே அப்படித்தான். யாரைப் பற்றியும் அவர் தவறாகப் பேச மாட்டார். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பவர் ஓவியா. அவர் அப்படி இருப்பதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

Source: Vikatan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *