பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ – சுஜா சர்ப்ரைஸ்

பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். ‘பிக் பாஸ்’ வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா.

ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ”ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று நிகழ்ச்சியின்போதே தெளிவுபடுத்தினார். ‘பிக் பாஸ்’ வீட்டில் தனது தந்தையை எண்ணி வருந்தியவருக்கு, கமல்ஹாசன் தந்தை ஸ்தானத்தில் இருப்பதாகக் கூறினார். 100 நாள்கள் முடியாமல் தன் வருங்கால கணவரைச் சந்திக்கப்போவதில்லை என அப்போது தெரிவித்திருந்தார் சுஜா. ‘என் திருமணத்துக்கு வாங்க’ எனக் கமலிடம் வேண்டுகோள் விடுக்க, கமல் ‘ஓ.கே” சொன்னதும் நெகிழ்ந்தார். அதுகுறித்தெல்லாம் பேச நமது அலுவலகத்துக்கு அழைத்திருந்தோம்.

அலுவலகத்துக்குள் நுழையும்போதே அனைவரிடமும் நலம் விசாரித்தார் சுஜா. வீடியோ நேர்காணல் என்றதும், ” ‘பிக் பாஸ்’ மாதிரி கட் பண்ணாமல், நான் என்ன பேசறேனோ அதை மக்களுக்கு காட்டுங்க’ என ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தார். அவருடன் தொடர்ந்து பேசினோம்…

”சுஜா வீட்டில் எப்படி?”

”வீட்டுல எல்லாரையும் மாதிரிதான். காலையில் எழுந்து கோலம் போட்டுட்டு, சமையல் செய்துட்டு, அம்மா மற்றும் தங்கச்சியோடு ஜாலியா பேசிட்டு, எனக்காகக் கொஞ்ச நேரம் செலவுப் பண்ணுவேன். ‘பிக் பாஸ்’ல என்னை எப்படிப் பார்த்தீங்களோ நிஜத்திலும் அப்படித்தான்.”

”ஏன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துக்க நினைச்சீங்க?”

”அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே கூப்பிட்டாங்க. அப்போ ஒரு படத்தில் நடிச்சுட்டிருந்தேன். அதனால், உடனே போக முடியலை. மறுபடியும் கூப்பிட்டபோது, அந்தப் படத்தில் என் போர்ஷன் முடிஞ்சிருச்சு. அதனால், கலந்துக்கிட்டேன்.”

”தினசரி காலையில் பிந்து, கணேஷ்ராம் டான்ஸ் ஆடுவாங்க. நீங்க என்ன செய்வீங்க?”

”எனக்கு சாமி நம்பிக்கை உண்டு. காலையில் எழுந்ததும் சாமி கும்பிடுவேன். அதுதான் என் தினசரி வழக்கம். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அதை ஒருநாள்கூட காட்டலை. இது எனக்கு ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்திச்சு.”

”ஏன்டா ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே வந்தோமோனு ஃபீல் பண்ணீங்களா?”

”அப்படி மட்டும் நினைச்சதே இல்லை. நூறு நாள் முடியும் வரை இருக்கணும்னுதான் நினைச்சேன்.”

” ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் உங்களைப் பற்றி வெளியே தெரியாத விஷயம்…”

”இருக்கு. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கற ஒவ்வொருவருக்கும் பிஸிக்கல் அண்டு மென்ட்டல் டெஸ்ட்டை வெச்சுத்தான் உள்ளேயே அனுப்புவாங்க. அப்படியே எனக்கு டெஸ்ட் வெச்சப்பவே, எனக்குத் தனியா இருக்கிறது பயம்னு பிக் பாஸ் டீமுக்குத் தெரியும். அப்படி இருந்தும், என்னை ஒரு வாரம் தனியறையில் இருக்கவெச்சு ஏமாத்திட்டாங்க” என்கிற சுஜாவுக்கு, ஓவியா கொடுத்த பிறந்தநாள் பரிசை மறக்கவே முடியாதாம்.

அப்படி என்ன பரிசு என்பதையும், ‘பிக் பாஸ்’ பற்றி வெளியே தெரியாத மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும் தெரிந்துகொள்ள, மறக்காம இந்த வீடியோவைப் பாருங்க.
Source: Vikatan

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு டிசம்பர் 16-ம் தேதி தேர்தல்!

Chennai: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் உள்ளார். இதனால், கட்சித் தலைவர் பொறுப்பை தன் மகன் ராகுலிடம் ஒப்படைக்க அவர் முடிவுசெய்துள்ளார். மூத்த தலைவர்களும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ராகுல் காந்தி, இப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.

ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதற்கு, அக்கட்சியின் காரியக் கமிட்டியின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். இதற்காக, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 5-ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற, டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால், டிசம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 19-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தியை மூத்த தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வதால், அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே, டிசம்பர் 11-ம் தேதி, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பெற்றார் சோனியா காந்தி. 19 ஆண்டுகாலம் தலைவர் பதவி வகித்த அவர், டிசம்பர் மாதத்தோடு விடைபெறுகிறார்.

Source: Vikatan

ஓவியா கேரக்டரே அப்படித்தான்!’ – ஆதரவுக்கரம் நீட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எதிராக நடத்தப்படும் காட்சிகள் குறித்து, கொதித்து எழுகின்றனர் நெட்டிசன்கள். ‘ஓவியா என்னுடைய தோழிதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்ப்பது ஓவியாவின் நிஜ கேரக்டர்தான்” என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஓரிரு நாள்களாக நடிகை ஓவியாவை வெளியேற்ற, ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் செய்யும் காரியங்கள், அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. நேற்று வெளியான நிகழ்ச்சியில் ஓவியாவை, நடிகை நமீதா, காயத்ரி, ஜுலி போன்றவர்கள் நடத்திய விதம் பார்வையாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யார் அடுத்து வெளியேறப் போகிறார்கள் என்பதையே மையமாக வைத்து, பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். 15 போட்டியாளர்களில் தற்போது 10 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். ஓவியாவை விரட்டுவதற்கு பிக் பாஸ் குடும்பத்தினர் முயற்சி செய்தாலும், நேயர்கள் மத்தியில் ஓவியாவுக்கான ஆதரவு குவிந்துவருகிறது. இதுகுறித்து, ட்விட்டரில் ஓவியாவுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசினோம், “ஓவியா என்னுடைய நெருங்கிய தோழி. நானும் அவளும் நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தோகாவுக்குப் போனோம். அப்போதிலிருந்து எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவருடைய கேரக்டர் இயல்பாகவே அப்படித்தான். யாரைப் பற்றியும் அவர் தவறாகப் பேச மாட்டார். மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பவர் ஓவியா. அவர் அப்படி இருப்பதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

Source: Vikatan

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்புத் தேதி அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கலப்புத் திருமணம்செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22), கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று, உடல்நலம் தேறினார்.

பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச் சாய்க்கப்பட்ட சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக, கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் டிசம்பர் 12 – அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

Source: Vikatan

சென்னை மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டு முன் தேர்வு ரத்து!

Chennai: சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரையாண்டு முன் தேர்வுகள் (2nd Midterm) ரத்து செய்யப்படுவதாக முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகச் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் Truncated பள்ளிகளுக்காக 10 முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்டத் தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்செயல்முறைகளுடன் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அரையாண்டு முன் தேர்வுகள் (Pre Half yearly exams) தொடர் மழையால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் ஆசிரியப் பெருமக்கள் பாடங்களை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களின் வேண்டுகோளுங்கிணங்க மேற்காணும் அரையாண்டு முன் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 31-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்ட பள்ளிகளில் முன்அரையாண்டுத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்தது.