ஆளும் கட்சியினரின் கண்காணிப்பில் தீக்குளித்தவர்களின் உடல்கள் தகனம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் உடல்களைக் காவல்துறையினர் மிரட்டி உறவினர்களிடம் வழங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கிமுத்து அவர் மனைவி சுப்புலட்சுமி அவர்களின் குழந்தைகள் மதி சரண்யா என்ற 5 வயது குழந்தையும் அட்சய பரணிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் நேற்று தீக்குளித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் இசக்கிமுத்துவைத் தவிர மூன்று பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை, வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர்.

உடனே காவல்துறையினர், இசக்கிமுத்துவின் தம்பி கோபியை மிரட்டி வலுக்கட்டாயமாக உடலை ஒப்படைத்துள்ளனர். உடலை வாங்காவிட்டால் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். திருநெல்வேலி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் சுதா கே.பரமசிவன் தலைமையில், மூன்று உடல்களும் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், மூன்று உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல், சுதா பரமசிவன் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே, சிந்துபூந்துறையிலுள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.

தீக்குளித்து இறந்தவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், உடலை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்துள்ளனர். ஆளும் அரசைச் சேர்ந்தவர்களும் காவல்துறைக்கு உறுதுணையாகச் செயல்பட்டுவருகின்றனர்.

Source: Vikatan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *