இந்தியாவையும் உலுக்கும் தனிநபர் துப்பாக்கி கலாசாரம்! அதிர்ச்சி ரிப்போர்ட்

தீவிரவாதத்தைவிட தனிநபர் ஆயுதங்கள் கொடூரமானவை. அவை, எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதைத்தான் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசைக் கச்சேரி துப்பாக்கிச் சூடு படம்பிடித்துக் காட்டியது. ஸ்டீபன் பட்டாக் என்ற தனிநபர், கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு மத்தியில் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் பலியாகினர். மேலும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில், ஸ்டீபன் பட்டாக் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்துகள் எழுந்தன. பின்னர் அவர், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் ஒரு கிறிஸ்தவர் என்றும், ஒரு மனநோயாளி என்றும் தகவல்கள் சொல்லப்பட்டன.

இதையடுத்து, ஸ்டீபன் பட்டாக்கின் வீட்டைச் சோதனையிட்டபோது 18 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயிரக்கணக்கான ரவுண்டு சுடக்கூடிய துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவை போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. அமெரிக்காவைப் பொறுத்தவரை துப்பாக்கிக் கலாசாரம் என்பது இயல்பான ஒன்றாக இருந்துவருகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள் அரசிடம் முறையாக அனுமதிபெற்று துப்பாக்கி லைசென்ஸ் வாங்கிக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொள்ளாலாம். ஆனால், அது பல சமயங்களில் பேராபத்தாக முடிந்துவிடுகிறது. அதற்கு, இந்தத் துப்பாக்கிச் சூடு சிறந்த உதாரணம்.

‘அமைதி நாடு’ என்று உலக அரங்கில் மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவும் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல… சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையைப் பார்த்தால் அனைவருக்கும் மயக்கமே வந்துவிடும். அதாவது, இந்தியாவில் மொத்தம் 33,69,444 பேர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார்களாம். இந்தியாவிலேயே அதிக துப்பாக்கி உரிமம் பெற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

இங்கு, 12,77,914 பேர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 22,532 பேர் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளனர். இந்தியாவில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பதில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஜம்மு காஷ்மீர். இங்கு 3,69,191 பேர் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் பஞ்சாப் இருக்கிறது. இங்கு, 3,59,349 பேர் துப்பாக்கி உரிமம் பெற்றிருக்கின்றனர். நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே மத்தியப் பிரதேசம் (2,47,130) மற்றும் ஹரியானா (1,,41,926) மாநிலங்கள் இருக்கின்றன.

மேலும், ராஜஸ்தான் (1,33,968), கர்நாடகா (1,13,631), மகாராஷ்டிரா (84,050), பீகார் (82,585), இமாச்சலப் பிரதேசம் (77,069), உத்தரகான்ட் (64,770), குஜராத் (60,784), மேற்கு வங்காளம் (60,525), டெல்லி (38,754), நாகலாந்து (36,606) போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களின் இருக்கின்றன. மேலும், பல மாநிலங்களில் 15,000-க்கும் அதிகமான உரிமம் பெற்ற துப்பாகிகள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக டாமன் – டையூ, தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி யூனியன் பிரதேசங்களில் 125 பேரிடம் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் உள்ளது. இவையெல்லாம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வ்வளவு பெரிய எண்ணிக்கை இது? வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, மதச்சார்பற்ற நாடு, அமைதிப் பூங்கா என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தியாவில், இவ்வளவு எண்ணிக்கையிலான தனி நபர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளுக்கு அவசியம் என்ன? நமது ஊரில் இருவருக்குள் பிரச்னை வந்தால் தாக்குவதற்குக் கத்தி, உருட்டுக்கட்டை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், வட இந்தியாவில் முதலில் துப்பாக்கியைத்தான் தூக்குவார்கள்.

அப்படிச் சண்டையின்போதோ அல்லது வேறு ஏதோ காரணங்களினாலோ கடந்த 2012-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு இறந்தவர்கள் மட்டும் 3,780-க்கும் மேல். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் தான் 33,69,444. இதில் உரிமம் பெறமால் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வேறு.

2014-ம் ஆண்டு பீகாரின் முங்கேர் பகுதியில் 450 கள்ளத் துப்பாக்கிகளும், அதனை ஒட்டியுள்ள மேற்குவங்கப் பகுதிகளிலிருந்து ஒரே நாளில் 1,500 கள்ளத் துப்பாக்கிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வட இந்தியாவின் பல பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகளைக் குடிசைத் தொழில்களைப் போன்றே இன்றும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக் கலாசாரம் என்பது எந்த ஒரு நாட்டையும் விட்டுவைக்கவில்லை… அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதையே இந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Source: Vikatan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *